தமிழகம்

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பாபு மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சென்னை கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

70 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரது உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கொளத்தூர் தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறி சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவரது இழப்பு பேரிழப்பாகும்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தவெக கட்சியின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.

வி.எஸ்.பாபுவின் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சென்னை - கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் பெற்ற தொடர் சிகிச்சை பலனளிக்காமல் மறைந்தது மிகவும் வருத்தத்துக்குரியது.

அனுபவமிக்க அரசியல்வாதி. தொகுதி மக்களின் பிரச்சனைகளை அறிந்து, புரிந்து தீர்க்கக்கூடியவராக செயல்பட்டவர். ஆளும் த.வெ.க வுக்கு தொகுதியிலே பலம் சேர்த்தவர். அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், த.வெ.க வுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், த.வெ.க வினருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வி.எஸ்.பாபு ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT