தமிழகம்

ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மகன் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

வெற்றி மயிலோன்

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் மறைவிற்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் கே.எம்.காதர் மொகிதீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனின் பாசத்திற்குரிய மகனும், அறிவியலாளருமான கே.எம்.கே. கலீலூர் ரஹ்மானின் மறைவுச் செய்தியறிந்து பெரிதும் வருந்தினேன்.

பெற்றெடுத்து பேரன்பு செலுத்தி வளர்த்து, ஆன்றோர் அவையில் பெரும்புகழ் எய்திடக் கண்ட மகன் மண்ணுலகைவிட்டு பிரிந்த துயர் தாளாது வேதனையில் வாடும் காதர் மொகிதீனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனின் மகன் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கே.எம்.கே.கலீலூர் ரஹ்மானை இழந்து வாடும் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், முஸ்லீம் லீக் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் கே.எம்.காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT