சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பயணிகள் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |
செங்கல்பட்டு / காஞ்சிபுரம்: சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க போதிய பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கம், செங்கல்பட்டில் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து அதிருப்தியடைந்து மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க நேற்று முன் தினம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசுப் பேருந்துகளை நாடி கிளாம்பாக்கத்தில் குவிந்தனர். திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குப் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பயணிகள் விடிய விடிய பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை நேரிட்டது. பேருந்துகள் வந்தபோது மக்கள் முண்டியடித்து ஏறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் பேருந்து நிலையத்துக்கு உள்ளேயே அமர்ந்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும், அவர்கள் ஜிஎஸ்டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று அதிகாலை 4 மணி வரை பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருப்பினும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.
மேலும், நேற்று காலை 9 மணிக்கு பேருந்து இல்லாததால், திண்டிவனம், திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யூர் விழுப்புரம் சேலம் போன்ற இடங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். அப்போது மீண்டும் பயணிகள் கிளாம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 3 மணி நேரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சொந்த வாடகை வாகனத்தில் ஊருக்கு சென்றவர்கள் அவதியடைந்தனர்.
கல்பாக்கம், வந்தவாசி, திருவண்ணாமலை, மதுராந்தகம், திண்டிவனம், செய்யூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் பேருந்து இல்லாததால் செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பல மணி நேரம் கழித்து பேருந்துகள் இயக்கப்பட்டன.
தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில், போதிய பேருந்து வசதி இல்லாமலும், உணவகங்கள் மூடப்பட்டதாலும் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பலமணி நேரம் காத்திருந்து பேருந்தில் சென்றனர்.