மேலூரில் காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த உள்ளூர் நிர்வாகிகள்.

 
தமிழகம்

மேலூர் காங். வேட்பாளருக்கு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு: சுயேச்சையாக காங்கிரஸ் கட்சியினர் 3 பேர் மனு தாக்கல்

சுப.ஜனநாயக செல்வம்

மதுரை: மதுரை மேலூர் தொகுதியில் நேற்று நிர்வாகிகளை சந்திக்க வந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை எதிர்த்து சுயேச்சையாக 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் மேலூரை தவிர்த்து 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சமீபத்தில், காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.யும், தெலங்கானா மாநில மேலிடப் பொறுப்பாளருமான பெ.விஸ்வநாதன் மேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு உள்ளூரைச் சேர்ந்த மனித உரிமைகள் துறை மாநிலத் தலைவர் மகாத்மா சீனிவாசன் உள்ளிட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், பெ.விஸ்வநாதன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

          

முன்னதாக அவர், போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மகாத்மா சீனிவாசனின் புரட்சித்தோழர் பாசறை திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியினரை சந்திப்பதற்கு, மாவட்டத் தலைவர் நூர் முகமது ஆகியோருடன் சென்றார். ஆனால், அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை மண்டபத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர். பின்னர், மண்டபத்திலிருந்து அவர் வெளியேறினார்.

கடலூரைச் சேர்ந்தவருக்கு மேலூர் தொகுதியை ஒதுக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், ‘மாணிக்கம் தாகூர் எம்.பி., மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க விஸ்வநாதனை நிறுத்தியுள்ளார்.

சமூக நீதி என்ற பெயரில் பொதுத் தொகுதியில் அவரை நிறுத்தியுள்ளனர். அந்த வாய்ப்பை மேலூரைச் சேர்ந்த பட்டியலினத்தவருக்கு ஒதுக்கியிருக்கலாம்’ என்றனர்.

இதன் பின்னர், காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதாவிடம் மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் மகாத்மா சீனிவாசன், நிர்வாகிகள் ராமசுந்தரம், அசோகன் ஆகியோரும் சுயேச்சைகளாக மனு தாக்கல் செய்தனர்.

காங்கிரஸிலிருந்து விலகல்

சிவகங்கை தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன், மாநில பொதுச் செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் காய் நகர்த்தி வந்தனர்.

ஆனால், நடிகர் கருணாஸுக்கு சிவகங்கையை ஒதுக்கியதால், சி.ஆர்.சுந்தர்ராஜன் அதிருப்தி அடைந்தார். இருப்பினும், வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்த மேலூரை தனக்கு ஒதுக்க வேண்டுமென கார்த்தி சிதம்பரத்திடம் சி.ஆர்.சுந்தர்ராஜன் வலியுறுத்தினார்.

ஆனால், அங்கும் முன்னாள் எம்பி விஸ்வநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்த சி.ஆர்.சுந்தர்ராஜன் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பான கடிதத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT