சென்னை: பள்ளி வகுப்பறை சுவரில் முதல்வரின் புகைப் படத்தை மாட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ள தவெகவினருக்கு ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதல்வர் விஜய் புகைப்படத்தை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கும் அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி இருக்கிறது.
ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளுக்கு சென்று, வகுப்புகளை தொந்தரவு செய்வதை முதல்வர் விஜய்யே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இதுபோன்ற செயல்கள் நடை பெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதல்வரையும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழக அரசுப் பள்ளிகளில் ஆளும் தவெகவினர் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில், பாடம் நடக்கும் நேரத்தில் புகுந்த தவெக நிர்வாகிகள், மாணவர்களிடம் முதல்வர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மற்றொரு பள்ளியில் தவெகவினர் கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய தகவலும் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்தில் குழந்தைகளை மூளைச் சலவை செய்து, மாணவர்களைத் திசை திருப்பித்தான் இந்த ஆட்சி வெற்றிபெற்றது என்ற கருத்து நிலவுகிறது. பள்ளிகள் என்பது மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்துக் கான இடமே தவிர, அரசியல் சுய லாபத்துக்காகப் பயன்படுத்தும் இடமல்ல. இதற்குச் சட்டத்தில் இடமும் இல்லை. இந்த அவலங்கள் முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் கவனத்துக்குச் சென்றுள்ளதா ? இதேபோல், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசுப் பள்ளி மாணவர்களுடன் செல்ஃபி எடுத்தபோது, மாணவர்கள் “தவெக, தவெக” என முழக்கமிட்ட வீடியோ சமூக வலை தளங்களில் பரவி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி நிலையங்களில் அரசியல் புகுவது மாணவர்களின் சுதந்திரமான கல்விச் சூழலைப் பாதிக்கும். ‘மாற்றத்தைத் தருவோம்' என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசிடமிருந்து இத்தகைய மோசமான மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை; அவர்கள் ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தையே விரும்புகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.