நன்மங்கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்.
தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில், திமுக சார்பில் எஸ்.அரவிந்த் ரமேஷ், அதிமுக சார்பில் கே.பி.கந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயலட்சுமி ராமன், தவெக சார்பில் பி.சரவணமூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எஸ்.புஷ்ண குமார், அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கே.விஸ்வநாதன் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக - சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பு
திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த் ரமேஷ், கடந்த 5 ஆண்டுகால சாதனைகளையும், மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களையும் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்.
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திறந்தவெளி அரங்கம், ராகவா நகர், சத்யா நகர் உள்ளிட்ட பகுதியில் ரேஷன் கடைகள்,நன்மங்கலம் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட திட்டப்பணிகள், 7 ஊராட்சிகளில், ரூ.74 கோடியில் சாலை, பூங்கா உள்ளிட்ட பணிகள் நடந்துள்ள தாகக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
வேங்கைவாசல் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தனை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை கவுதமி.
அதிமுக - முதன்மை தொகுதியாக மாற்ற உறுதி
முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். ‘‘நான் எம்எல்ஏவாக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
சோழிங்கநல்லூர் தொகுதியில் பல மாற்றங்களை ஏற்படுத்த எனக்கு வாக்களியுங்கள். இந்தத் தொகுதியை முதன்மைத் தொகுதியாக மாற்றுவேன்’’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாதக - மக்கள் குறைகளைத் தீர்க்க திட்டம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயலட்சுமி ராமன், ‘‘பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். போக்குவரத்து நெரிசலைக்குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காரப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர் ஜெயலட்சுமி ராமன்.
தொகுதி கிராமங்களில் ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் திட்டத்தை வைத்துள்ளேன்’’ என்று கூறி வருகிறார்.
தவெக - தொகுதியை மேம்படுத்த நடவடிக்கை
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி.சரவணமூர்த்தி, ‘‘இந்த தொகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும், வணிக வளாகம் மேம்படுத்தப்படும்.
துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் பி.சரவணமூர்த்தி.
மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், தொகுதியை மேம்படுத்த பல்வேறு அடிப்படை பணிகளை மேற்கொள்வோம்’’ என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
இதேபோல் பிற கட்சிகளின் வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.