தாங்கல் குப்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் அ.பு.பூர்ணிமா.
சென்னை: தொழிற்சாலைகள் நிறைந்த முக்கிய தொகுதியான அம்பத்தூரில், இந்த முறை தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் விறுவிறுப்படைந்துள்ளது. திமுக சார்பில் அ.பு.பூர்ணிமா முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண்கிறார்.
அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கே.என்.சேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் தெ.க.சிலம்பரசன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜி.பாலமுருகன் மற்றும் சுயேச்சைகள் என 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக - வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை
திமுக வேட்பாளரான அ.பு.பூர்ணிமா, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பிரச்சாரம் செய்துள்ளனர்.
அம்பத்தூரின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களைக் கொண்டு வருவேன் என்று கூறி தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் கே.என்.சேகர்.
பாமக - அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் கே.என்.சேகர், தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் என்ற பலத்துடன் களமிறங்கியுள்ளார். மக்களின் அன்றாடத் தேவைகளை மையப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
சாலை விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம், உள்கட்டமைப்பு சார்ந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என வாக்குறுதி அளித்து வருகிறார்.
நாதக-சுகாதார குடிநீர், கல்வி, மருத்துவம் இலவசம்
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தெ.க.சிலம்பரசன், “மக்களுக்கு சுகாதாரமான குடிநீர், கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றை இலவசமாக வழங்குவோம்.
பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் தெ.க.சிலம்பரசன்.
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வோம், மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்” எனக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
தவெக-பெண்களின் பாதுகாப்பு, நிர்வாக மாற்றம்
தவெக வேட்பாளர் ஜி.பாலமுருகன், வாகனப் பரப்புரை, தெருமுனை பிரச்சாரம், பூங்காக்களில் மக்களோடு மக்களாக நடைபயணம் என உற்சாகத்துடன் வாக்கு சேகரித்து வருகிறார்.
தொண்டர்களுடன் வீதிகளில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் ஜி.பாலமுருகன். படங்கள்: ம.பிரபு
திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக மாற்றத்தை முன்னிறுத்தியும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தை தொடர்ந்து வருகின்றனர்.