திமுக வேட்பாளர் சா.மு.நாசரை மலர்தூவி வரவேற்ற தொகுதி மக்கள்

 
தமிழகம்

ஆவடி தொகுதியில் அரியணைக்காக மல்லுகட்டும் கட்சிகள்

ம.மகாராஜன்

சட்டப்பேரவை தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆவடி தொகுதியில் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி, தவாக மற்றும் 10 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 20 பேர் களத்தில் உள்ளனர்.

திமுக - அமைச்சர் சா.மு.நாசர்

தமிழக அமைச்சரும் திமுக வேட்பாளருமான சா.மு.நாசர், கடந்த 5 ஆண்டுகளில் ஆவடியில் மட்டும் 81 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டது உட்பட திமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் பட்டியலிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்.

          

திருநின்றவூர் ஈசா ஏரியை ரூ.100 கோடியில் புனரமைக்க நடவடிக்கை, சாலைகள் சரிசெய்து கொடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்.

பாஜக - மகேந்திர ராஜசிம்மா

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான மகேந்திர ராஜசிம்மா, திமுகவின் ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டியும், தொகுதியில் நிலவும் பிரச்சினைகளைப் பட்டியலிட்டும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜக வேட்பாளர் மகேந்திர ராஜசிம்மாவை ஆரத்தி எடுத்து வரவேற்கும் பொதுமக்கள்

மேலும், ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படும், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் தூய்மையான குடிநீரை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி - புனிதா சண்முகம்

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் புனிதா சண்முகம், தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்கிறார்.

உலகத் தரத்தில் கல்வி, உயிர்காக்கும் மருத்துவம், தூய குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை வழங்கி, வீதி வீதியாகச் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

ஆவடி தென்றல் நகரில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் புனிதா சண்முகம்

ஆவடி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் ஆர்.ரமேஷ் குமார்ஆவடி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் ஆர்.ரமேஷ் குமார்

தமிழக வெற்றிக் கழகம் - ஆர்.ரமேஷ்குமார்

தமிழக வெற்றிக் கழக வேட்பாளரான ஆர்.ரமேஷ் குமார், வித்தியாசமான பிரச்சார உத்திகளைக் கையாண்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். போதைப்பொருள் புழக்கம் ஒழிப்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றை முதன்மை வாக்குறுதிகளாகக் கூறும் இவர், தேநீர் கடைகள், சாலையோர உணவகங்களில் மக்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்து வருகிறார்.

பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி வரும் நிலையில், ஆவடி தொகுதியின் அரியணையைக் கைப்பற்றுவதில் பிரதான கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன.

SCROLL FOR NEXT