தமிழகம்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு: அமைச்சர் அறிவிப்பை புறக்கணித்து போராட்டத்தை தொடர முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: தொடர் போராட்​டத்தை அடுத்து பகு​திநேர ஆசிரியர்​களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்​கப்​படும் என்று அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார். எனினும், பணிநிரந்​தரம் செய்​யப்​படும் வரை போராட்​டம் தொடரும் என்று பகு​திநேர ஆசிரியர்​கள் அறி​வித்​தனர்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணிநியமனம் செய்​யப்​படு​கின்​றனர். அதன்​படி தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர்.

இவர்​கள் பள்​ளி​களில் வாரந்​தோறும் 3 நாட்​கள் பாடம் நடத்​து​வார்​கள். அதற்கு ரூ.12,500 சம்​பள​மாக தரப்​படு​கிறது. மேலும், பணிநிரந்​தரம் செய்​யக் கோரி பகு​திநேர ஆசிரியர்​கள் நீண்​ட​கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இதற்​கிடையே திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கொடுத்த வாக்​குறு​தியை நிறைவேற்ற வலி​யுறுத்தி பகு​திநேர ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டுக்​குழு சார்பில்சென்​னை​யில் கடந்த ஜன.6-ம் தேதி முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது.அதன்​ படி நேற்று முன்​தினம் போராட்​டத்​தில் ஈடு​பட்ட பகு​திநேர ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்து வானகரத்​தில் உள்ள மண்​டபத்​தில் அடைத்​தனர்.

இதற்கிடையே கூட்​டுக்​குழு நிர்​வாகி​களு​டன், பள்​ளிக்​கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் சென்​னை​யில் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதில் ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்வி திட்ட இயக்​குநர் ஆர்த்​தி, பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் கலந்​து​ கொண்​டனர்.

பின்​னர் அமைச்​சர் அன்​பில் மகேஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பகு​திநேர ஆசிரியர்​களின் ஊதி​யம் ரூ.2500 உயர்த்​தப்​பட்டு இனி மாதம் ரூ.15 ஆயிர​மாக வழங்​கப்​படும்​. மே மாத விடு​முறை காலத்​தி​லும் குறைந்​த​பட்​சம் ரூ.10 ஆயிரம் வழங்​க​வுள்​ளோம். மேலும், அரசு ஊழியர்​களுக்​கான மருத்​து​வக் காப்​பீடு திட்​டத்​தில் பகு​திநேர ஆசிரியர்​கள் சேர்க்​கப்​படு​வார்​கள். இதுதவிர, இறந்​து​போன 200 ஆசிரியர்​களின் குடும்​பங்​களுக்கு தேவை​யான உதவி​கள் செய்​யப்​படும்.

அதே​நேரம் பணிநிரந்​தரம் செய்​வது குறித்து சட்​டத் துறை அலு​வலர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி முடிவு எடுக்​கப்​படும். மத்​திய அரசு தமிழக பள்​ளிக் கல்​வித் துறைக்கு கடந்த 2 ஆண்​டு​களில் தர வேண்​டிய ரூ.3,548 கோடியை இன்​னும் வழங்​க​வில்​லை. இதை ஆசிரியர்​களும் அறி​வார்​கள். பகு​திநேர ஆசிரியர்​களை இந்த அரசு கைவி​டாது. மேலும், அவர்​களது வாக்​குறு​தி​கள் நிச்சயம் நிறைவேற்றி தரப்​படும். இவ்​வாறு அமைச்சர் கூறி​னார். அதே​நேரம் பணிநிரந்​தரம் கோரிக்கை நிறைவேறும் வரும் வரை போராட்​டம் தொடரும் என்று போராட்​டக்​குழு அறி​வித்​தது.

தற்​கொலைக்கு முயன்ற ஆசிரியர் உயி​ரிழப்பு: போராட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக பெரம்​பலூர் மாவட்ட ஆசிரியர் கண்​ணன் தற்​கொலைக்கு முயன்​றார். கீழ்​ப்பாக்​கம் அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயி​ரிழந்​தார். இந்த விவ​காரம் சக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.முன்ன​தாக ஊதிய உயர்​வு அறிவிப்பைத் தொடர்ந்து போராட்​டம் வாபஸ் பெறப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​பட்ட நிலை​யில், ஆசிரியரின் மரணம் களத்தை மாற்​றிய​தாக கூறப்​படுகிறது.

இதற்​கிடையே இந்த தற்​கொலை விவ​காரத்​தில் தமிழக அரசின் செயல்​பாட்டை கண்​டித்​தும், அவர் குடும்​பத்​துக்கு ரூ.50 லட்சம் இழப்​பீடு வழங்​கவும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதேபோல் அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாமக தலை​வர்​ அன்​புமணி உள்​ளிட்​டோர்​ இழப்பீடு தர வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.

SCROLL FOR NEXT