

நாகை அருகேயுள்ள மகிழி கிராமத்தில் மழைநீரில் மூழ்கிஉள்ள தாளடி பயிரை காண்பிக்கும் விவசாயிகள்.
நாகப்பட்டினம்: நாகை அருகே வடிகால் கால்வாய் தூர் வாரப்படாததால் 2,000 ஏக்கர் தாளடி பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி, கீழப்பிடாகை, காரப்பிடாகை, மகிழி உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, நடவு செய்த 2,000 ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் ஓடும் வேதாரண்யம் கால்வாய் தூர் வாரப்படாததாலும், ஆகாயத் தாமரை அகற்றப்படாததாலும் மழைநீர் வடியாமல் வயல்களில் தேங்கி, 2,000 ஏக்கரில் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கிஉள்ளன.
ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ள நிலையில், தற்போது வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்களை சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக வேதாரண்யம் கால்வாயை தூர் வாரி, ஆகாயத் தாமரையை அகற்றி கால்வாயில் மழைநீர் விரைவில் வடியும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.