பணி நிரந்தரம் கோரி சென்னை சிவானந்தா சாலையில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ம.பிரபு |
சென்னை: பணிநிரந்தரம் கோரி சென்னையில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 12 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வாரத்தில் 3 நாட்கள் பணியாற்றி வரும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.12,500 வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் பணிநிரந்தரம் கோரி கடந்த 14 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் சே.முரளி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வெ.ராமகேசவன், மாநில பொருளாளர் ஆர்.ஆனந்தகுமார் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டம் குறித்து மாநிலத் தலைவர் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``குறைந்த ஊதியத்தில் கடந்த 14 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறோம். ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எதிர்காலம் தெரியாமல் மனச்சோர்வுடன் உள்ளோம்.
அரசு எங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்'' என்றார். காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.