சென்னை: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் 'எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய முக்கிய தலைவர்களுடன் பயணித்தவர் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதோடு, ஓபிஎஸ் தொண்டர்கள் மீட்பு இயக்கத்தில் முக்கிய ஆலோசகராக இருந்த நிலையில், தற்போது புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசியல் என்பது மக்களுக்கானது. தனி ஒருவருக்கானது அல்ல. எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குகிறேன். எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடாது. ஒத்த கருத்துடையவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம். கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் பாதை தனி பாதை” என்றார்.
பின்னர், ஓபிஎஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஓபிஎஸ் உடனான அத்தியாயம் முடிந்தது. நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. ஓபிஎஸ்ஸுக்காக நாம் உயிரை துறக்க முடியுமா? வாழ்நாளை வீணாக்க முடியுமா? வாழ்நாள் போனால் வருமா? அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என தெரியவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க” என பதிலளித்துள்ளார்.