பாம்பன் கடல் கால்வாயில் கப்பல்கள், விசைப்படகுகள் தடையின்றி செல்ல தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்.
ராமேசுவரம்: பாம்பன் கடல் கால்வாயில் கப்பல்கள், விசைப்படகுகள் தடையின்றி செல்ல ரூ. 9.5 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாட்டின் மிகப் பழமையும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த துறைமுகங்களில் பாம்பன் துறைமுகமும் ஒன்று. கி.பி. 1,480-ம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய புயல் காரணமாக இயற்கையாகவே மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை இடையே பாம்பன் கால்வாய் பெரிதாக உருவானது.
பாம்பனுக்கு அருகில் குந்துகால், குருசடைத் தீவு ஆகிய 2 கடல் எல்லைகளுக்கு இடையில் உள்ள நீர்ப்பரப்பிலிருந்து தொடங்கி, பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலங்களை கடந்து, சுமார் 2 கிமீ வரை பாம்பன் கால்வாய் வழித்தடம் உள்ளது. கால்வாயின் அகலம் 125 மீட்டராகவும், ஆழம் அதிகபட்சம் 2.11 மீட்டரும் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1854-ம் ஆண்டில் முதன்முறையாக 4,400 அடி நீளத்துக்கு பாம்பன் கால்வாய் முதன்முதலாகத் தூர்வாரப்பட்டது. பின்னர் 1964-ம் ஆண்டு தனுஷ்கோடி புயலுக்குப்பின்னர் தூர் வாரப்பட்டது. தற்போது பாம்பன் கால்வாய் வழித்தடத்தில் ஆழம் 2 மீட்டருக்குக் கீழாகக் குறைந்து விட்டது.
பாம்பன் கால்வாயில் மண் நிறைந்து காணப்படுவதால் குறிப்பிட்ட நேரத்தில் கப்பல்கள், விசைப்படகுகள் கால்வாயைக் கடப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன் பல நேரங்களில் கப்பல்களும், படகுகளும் மணலில் சிக்கி விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் பாம்பன் கால்வாயைத் தூர்வார வேண்டும் என பல ஆண்டுகளாக மீனவர்கள், கப்பல் உரிமையாளர்கள், கடல்சார் வர்த்தகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பாம்பன் கால்வாயில் தேங்கியுள்ள மணலை அகற்றி ஆழப்படுத்த தமிழ்நாடு கடல்சார் வாரியம் மூலமாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.
அதன் அடிப்படையில் ரூ.9.5 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது தனியார் நிறுவனம் மூலம் பாம்பன் கால்வாயில் தேங்கியுள்ள மணலை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக பாம்பன் குந்துகால் மன்னார் வளைகுடா கடலில் மணல் தூர்வாரும் கப்பல் நிலை நிறுத்தப்பட்டு இரவு, பகலாக மணலை அகற்றும் பணி நடந்து வருகிறது. கப்பலில் உள்ள ட்ரெஜிங் பம்ப் கால்வாய் உள்ளே நிறுத்தப்பட்டு அடியில் இருக்கும் மணலை தண்ணீருடன் உறிஞ்சி இழுத்து இரும்புக் குழாய் மூலம் கரைக்கு கொண்டு வரப்படுகிறது. 3,500 மீட்டர் தூரத்துக்கு கால்வாய் மணலை அகற்ற ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது சுமார் 2,500 மீட்டர் தூரத்துக்கு மணல் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்மாத இறுதியில் மணல் அகற்றும் பணிநிறைவு பெறும். அதன்பின், கப்பல்கள் மணலில் சிக்காமல் எவ்விதத் தடையும் இன்றி செல்லலாம். பாம்பன் கால்வாயில் மணல் அகற்றும் பணி விரைந்து நடைபெறுவது உள்ளூர் மீனவ மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.