தமிழகம்

குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம் - பவனியாகச் சென்ற கிறிஸ்தவர்கள்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனியும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றன.

யேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு முன்பாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக கோவேறு கழுதை மீது அமர்த்தப்பட்டு பவனியாக அழைத்துச் செல்லப்பட்டதை நினைவுகூறும் வகையில் உலகம் முழுவதும் புனித வாரத்தின் தொடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் புனித வாரத்தின் தொடக்க தினமான இன்று (ஞாயிறு) குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் காலை குருத்தோலை பவனியும், அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. பவனியில் பங்கேற்ற இறைமக்கள் கைகளில் குருத்தோலையை உயர்த்தி பிடித்தவாறு "ஓசானா தாவீதின் புதல்வா" என்ற பாடலைப் பாடியபடி ஆலயத்தை ஒட்டியுள்ள வீதிகளில் பவனியாகச் சென்றனர்.

          

தேசிய திருத்தலமான சாந்தோம் பேராலயத்தில் அதிபர் வின்சென்ட் சின்னதுரை தலைமையில் புனித ரபேல் மேல்நிலைப்பள்ளி அருகே இருந்து ஆலயம் நோக்கி நடைபெற்ற குருத்தோலை பவனியிலும் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் கலந்துகொண்டனர்.

இதேபோல், சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை பேராலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிஎஸ்ஐ திருமண்டல தலைமை ஆலயமான கதீட்ரல் பேராலயம், வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் நல்மேய்ப்பர் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் குருத்தோலை பவனியும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றன.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் குருத்து ஞாயிறு கொண்டாடப்பட்டது. குரோம்பேட்டை அமலஉற்பஅன்னை ஆலயம், தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், சேலையூர் புனித மாற்கு ஆலயம், பெருங்களத்தூர் குழந்தை யேசு ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், ரயில்நகர் புனித அந்தோணியார் ஆலயம், பேரமனூர் எம்டிசி நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மறைமலைநகர் தூய விண்ணரசி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அலெக்சிஸ் மனோகர் தலைமையில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து குருத்தோலை பவனி தொடங்கி திருவள்ளுவர் சாலை, பாவேந்தர் சாலை வழியாக ஆலயத்தை சென்றடைந்தது. பின்னர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. காட்டாங்குளத்தூர் லூர்து அன்னை ஆலயத்தில் அருட்தந்தை அருள்ராஜ், அருட்தந்தை மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற குருத்தோலை பவனியிலும் தொடர்ந்து நடந்த சிறப்பு திருப்பலியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT