எடப்பாடி பழனிசாமி

 
தமிழகம்

“முதல்வர் விஜய் பொதுவெளிக்கு வந்து மக்களைச் சந்திக்க வேண்டும்” - பழனிசாமி

தமிழினி

சென்னை: “தமிழகத்தில் பாலியல் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வராத நாளே இல்லை. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை,” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சேலம் செல்வதற்காக எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காவல் நிலையத்துக்கு ஓர் அமைச்சர் சென்று எந்த அடிப்படையில் ஆய்வு செய்கிறார்? தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தவெக நிர்வாகிகள் அடிக்கின்ற கூத்து வெட்கக்கேடானது.

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையிலிருந்து அதிகாரிகள் அனுமதி இல்லாமல் தவெகவினர் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். இந்த விவகாரம் கண்டனத்துக்குரியது, அதிகாரிகள் அரசின் ஒப்புதலின் அடிப்படையில்தான் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் எல்லை மீறி அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் பாலியல் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வராத நாளே இல்லை, அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. பொதுவெளிக்கு வந்து மக்களைச் சந்தித்தால்தான் அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பது முதல்வருக்குத் தெரியவரும்.

தமிழக மக்களின் பிரதான பிரச்சினையாக காவிரி நீர் விவகாரம் இருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் உரிய முறையில் குரல் கொடுத்து எடுத்துரைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார்.

அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரே கட்சியாக இருக்கும் நிலையில், தமிழகத்துக்கு மட்டும் ஏன் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT