“தவெக பிரச்சினைகளுக்கு முதல்வர் விஜய் வாய் திறந்து விளக்கம் அளிக்க வேண்டும்” - மு.வீரபாண்டியன்

மு.வீரபாண்டியன்

மு.வீரபாண்டியன்

Updated on: 
2 min read

அரியலூர்: “கட்சி சார்ந்த பிரச்சினைகளுக்கு முதல்வர் விஜய் வாய் திறந்து விளக்கமளிக்க வேண்டும். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும்போது, அது குறித்து கட்சி முடிவு எடுக்கும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரதமர் மோடி முன்னிலையிலேயே மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் சிவக்குமார் முன்மொழிகிறார். இது ஏற்கத்தக்கதல்ல.

இது இரு மாநிலங்களின் நதிநீர் பிரச்சினை மட்டுமல்ல, இரு மாநிலங்களில் நீண்ட நெடிய நல்லுரவு பிரச்சினை. நாட்டின் ஒற்றுமை, ஒருமைபாடு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். எனவே, கர்நாடக முதல்வர் அவசரகதியில் பேசுவது ஏற்புடையதல்ல. காவிரியை எதிர்பார்த்துதான் டெல்டா உள்ளது.

டெல்டாவில் கால்பதிக்காமல் காவிரிக்கு பொருளில்லை. எத்தனை அணை கட்டினாலும், டெல்டாவை நோக்கி வருவது காவிரிதான். இல்லையெனில் காவிரி என்ற பொருள் இழந்து விடும். எனவே, காவிரியில் அணை கட்டுவது ஏற்க இயலாது. நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

முந்தைய அரசின்போது தமிழகத்துக்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்கவில்லை. அதேபோன்று தற்போதும் மத்திய அரசு இருக்க கூடாது. உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு முன்வரவேண்டும். தமிழகத்தில் பல்லாயிரகணக்கான அரசு காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை உடனடியாக நிரந்தர பணியாளர்களாக நிரப்பவேண்டும். மேலும், தவெக தேர்தல் வாக்குறுதியாக தந்த தற்காலிக பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணி ஓய்வு காலங்களில் அவர்களுக்கான நிதியை வழங்க வேண்டும்.

அரியலூரில் தனியார் சிமென்ட் ஆலைகள் லாபத்தில் இயங்கும் நிலையில், அரசு சிமென்ட் ஆலை நட்டத்தில் இயங்குவதாக அரசு தெரிவிப்பது ஏற்புடையதல்ல. உரிய ஆய்வு மேற்கொண்டு லாபகரமாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதியில் வீட்டுமனை இன்றி வாழும் மக்களுக்கு உரிய வாழ்வாதாரத்தை தர வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முன்பிருந்த நிலை நீடிக்க வேண்டும். கொலை குற்றங்களை தடுக்க முதல்வர் மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல் துறை நுண்பிரிவு பல இடங்களில் சரியாக வேலை செய்யவில்லை.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ, துணை சபாநாயகர் பிரச்சினைகள், அவர்களது கட்சி சார்ந்த பிரச்சினைகளுக்கும் முதல்வர் விஜய் வாய் திறந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

13 கோடி பேரின் வாக்குகள் பறிக்கப்பட்டபோதும், விஜய் கருத்து ஏதும் சொல்லாதது ஏற்கதக்கதல்ல. கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்குகிறது என்றால், அது அரசின் தவறான நடவடிக்கைகளுக்கும் ஆதரவல்ல. மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு ஆதரவாக போராடுகிறோம்.

இந்தியா முழுவதும் விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, டிச.1,2,3 ஆகிய 3 தினங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மத்திய,மாநில அரசுகளை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவுள்ளோம்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும்போது அது குறித்து கட்சி முடிவு எடுக்கும்.

சதுப்பு நிலம் இயற்கை நமக்கு அளித்துள்ள நன்கொடை. அங்கு கட்டுமானம் கூடாது. தலைமைச் செயலகம் கட்டும் முயற்சியும் கூடாது. இயற்கை சூழல் பாதுகாக்கப்படவேண்டும்.

டாஸ்மாக் மதுக்கடைகள் மூட வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும். வரும் தலைமுறையினர் மதுபழக்கத்துக்கு ஆளாக கூடாது.

தவெக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். போதிய மழை இல்லாததால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>மு.வீரபாண்டியன் </p></div>
“என்ன செய்கிறது தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை?” - தினகரன் கேள்வி

X