சென்னை: ‘டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பழனிசாமி பேசியதாவது: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றால் வாங்க மறுக்கிறார்கள்.
அந்த கொள்முதல் நிலையங்களுக்கு முன்பு திறந்த வெளியில் நெல்லை குவித்து வைத்துள்ளனர். மழையால் நெல் நனைந்து முளைத்துள்ளது.
மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யாததால், நாங்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை என்று கொள்முதல் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டுதோறும் செப். 1-ம் தேதி மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்துவிடும்.
தமிழக அரசு உடனே மத்திய அரசிடம் பேசி விலை நிர்ணயம் செய்து, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.