அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி

 
தமிழகம்

திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள்: மயிலாப்பூர் பிரச்சாரத்தில் பழனிசாமி ஆவேசம்

செய்திப்பிரிவு

“அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிகம் இடம்; அங்கீகரிக்கப்பட்ட விசிக-வுக்கு குறைந்த தொகுதி. இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள், திமுக-வை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள்” என்று, மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் அறிவிப்புக்குப் பிறகான தனது தேர்தல் பிரச்சாரத்தை, வளர்பிறை முகூர்த்த நாளான நேற்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்து, மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட மந்தைவெளி புனித மேரி சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

          

நான் ஏற்கெனவே 193 தொகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தேன். அது மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இறைவன் அருளால் அதிமுக தலைமையிலான தே.ஜ.கூட்டணி 210 இடங்களில் வென்று, அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். திமுக-வின் நிலை இன்று பரிதாபமாக உள்ளது. திமுக கூட்டணி அமைப்பதற்கு 20 நாட்களாகப் போராடினார்கள். ஒவ்வொரு கட்சியும் பதறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் போராடியே தொகுதி பெறும் அவல நிலை உள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகள் அடிமையாக உள்ளனர். ஆனால், அதிமுக கூட்டணித் தலைவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.

திமுக-வில் 10 ஆண்டுகாலம் பயணிக்கிறோம் என்கிறார்கள். அதனால் தான் 2021 தேர்தலை விட குறைவான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். திமுக-விடம் ஆட்சி இருக்கும்போது, அவர்களை புகழ்ந்து பாட உங்களை பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால், தேர்தலில் உங்களுக்குத் தகுந்த அந்தஸ்து கொடுக்காத கட்சி திமுக. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராடிப் பார்த்தார்கள், நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டிப்பார்த்தார்கள். ஆனாலும் கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளைப் பெற்றுள்ளனர்.

விசிக-வும் எவ்வளவோ போராடி 8 இடங்களை மட்டுமே பெற்றனர். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிகம் இடம்; அங்கீகரிக்கப்பட்ட விசிக-வுக்கு குறைந்த தொகுதி. இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள், திமுக-வை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு துன்பம் தான் மிஞ்சியது. திமுக என்றால் குடும்பக் கட்சி, வாரிசு அரசியல். 5 ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை மக்களுக்கு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அதிமுக ஆட்சியில் தான் பிரம்மாண்டத் திட்டங்கள் வந்தன.

எப்போது பார்த்தாலும் கொள்ளை அடிப்பதுதான் குறிக்கோள். கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் இதுதான் அவர்களின் தாரக மந்திரம், இதைத்தான் 5 ஆண்டுகளாகச் செய்தார்கள். ஸ்டாலின் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மருமகன் சபரீசன், மனைவி துர்கா என்று 4 அதிகார மையங்கள் உள்ளன. இவற்றுக்கு முடிவுகட்டக்கூடியது தான் வரக்கூடிய தேர்தல். நாடு செழிக்க வேண்டுமென்றால் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கவேண்டும். அப்படி இல்லாமல் தமிழகம் சீரழிகிறது என்றால் இதற்கு காரணம், திறனற்ற முதல்வர் ஆள்கிறார். எனவே, இந்த குற்றங்களை எல்லாம் தடுப்பதற்கு அதிமுக தலைமையிலான தே.ஜ.கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.

இந்தத் தொகுதி நமது கூட்டணியில் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். சென்னை மாநகரத்தில் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாமக போட்டியிட்டால் மாம்பழம் சின்னத்திலும், அமமுக வேட்பாளர் போட்டியிட்டால் குக்கர் சின்னத்திலும் வாக்களியுங்கள். அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பை பை ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழிசை பேட்டி: பழனிசாமியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘மக்கள் இன்று மிகுந்த மன வேதனையுடன் இருக்கின்றனர். தமிழக முதல்வராக பழனிசாமி பதவியேற்று, இரட்டை இன்ஜின் அரசு தமிழகத்தில் அமையும்போது மக்களுக்கு நிச்சயம் பலன் தரும். பாஜக வேட்பாளர்கள் யார் என்பது கட்சி அறிவித்த பிறகு தான் தெரியவரும். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட காரணத்தால், மயிலாப்பூரில் பழனிசாமி பிரச்சாரத்தில் கலந்து கொண்டிருக்கிறேன்.

மயிலாப்பூரில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் மயிலாப்பூரில் போட்டி போடுகிறேனா என்பது தெரியாது. ஆனால், தமிழகத்தில் போட்டியிடுவேன். பாஜக-வுக்கு சென்னையில் மட்டுமே பிரதிநிதித்துவம் இருக்கக் கூடாது அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சென்னையில் ஒரு தொகுதி மட்டும் பெறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் பாஜக பலமாக இருப்பதால் 5 தொகுதிகளைப் பெற்றிருக்கிறோம். எதிர் கூட்டணி கலங்கப்பட்டு இருப்பதால், தமிழகத்தில் எங்களுக்கு களம் நன்றாக இருக்கிறது’’ என்றார்

SCROLL FOR NEXT