அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: அனைத்து தேர்தல்களுக்கும் இப்போதே தயாராக வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 2 அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர். முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பழனிசாமி பேசியதாவது: தவெக அரசு பல்வேறு சட்ட சிக்கல்களை சந்தித்து வருகிறது.
எனவே, நீண்ட காலம் நீடிக்காது. விரைவில் தேர்தல் வரலாம் அல்லது 2029 மக்களவைத் தேர்தலுடன், தமிழக சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவை இடைத்தேர்தல், சட்டப்பேரவைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல் என அனைத்து தேர்தல்களையும் எதிர்கொள்ள மாவட்டச் செயலாளர்கள் இப்போதே தயாராக வேண்டும்.
தவெக அறிவித்த திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு அரசிடம் நிதி இல்லை. சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடப்பது இல்லை. தவெக எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதை மக்கள் பார்த்து வருகின்றனர்.
விலைவாசி உயர்வு, தொடர் கொலைகள், லாக்கப் மரணங்கள், தவெக நிர்வாகிகளே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாவது போன்ற காரணங்களால், இப்போது பெற்ற வெற்றியைக்கூட வரும் தேர்தல்களில் தவெக பெற வாய்ப்பு இல்லை.
எனவே, கிளை அளவில் கட்சியை வளர்த்து, அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலையச் செயலாளர் வரகூர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.