திருப்பூர்: “சுயநலத்துக்காக தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுக்கத் துணிந்துவிட்ட பழனிசாமிக்குத் தமிழ்நாடு பதினோராவது தோல்வியைக் கொடுக்க வேண்டும். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் அளிக்கும் வாக்கு என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குப் போடப்படும் தடைக்கற்கள்” என தமிழக முதல்வர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்18) திருப்பூரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை: “பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த திருப்பூருக்கு, நேற்று இந்தியாவிலேயே ஒரு மாபெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியோடு நான் வந்திருக்கிறேன். நாம் பறக்கவிட்ட கருப்புக் கொடி, பா.ஜ.க. பறக்கவிடத் துடித்த காவிக் கொடியை வீழ்த்தியிருக்கிறது. போர் என்றால், வெற்றி ஒன்றுதான் குறி. நம்முடைய குறி தவறவில்லை. இதுதான் தி.மு.க, இதுதான் தமிழ்நாடு. இதுதான் திராவிட மாடல். தொகுதி மறுவரையறை எனும் பேராபத்தை 2023-லேயே உணர்ந்து, நாட்டில் முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது நம்முடைய தி.மு.க.தான்.
இதனால் பாதிக்கப்படும் மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை அழைத்து, சென்னையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் சில தீர்மானங்களை நிறைவேற்றினோம். ஒரு கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கினோம். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தித் தீர்மானம் போட்டோம். ஏன், சட்டமன்றத்திலும் தீர்மானம் போட்டோம். அப்போது இரட்டை நாக்கு கொண்ட அ.தி.மு.க. சட்டமன்றத்தில் ஒரு பேச்சு பேசினார்கள். வெளியே போய் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. நாடகம் போடுகிறது என்று நா கூசாமல் பேசினார்கள்.
இப்போது மூன்று நாட்களுக்கு முன்பு, இந்த மசோதா வந்தவுடனே, கருப்புக் கொடி போராட்டம் நாம் செய்தோம். அந்தச் சட்ட மசோதாவின் நகலை எரித்தோம். நாமக்கல்லில் பற்ற வைத்த தீ, நாடு முழுக்கப் பரவியது. அதனுடைய வெப்பம், நேற்று பார்லிமெண்ட்டில் அந்தச் சதித் திட்டத்தை எரித்துச் சாம்பலாக்கியது. தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையில் அ.தி.மு.க. அடிமைகள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு சிறப்பாகச் செய்யும், அமித்ஷாவே சொல்லிவிட்டார்” என்று சொன்னார்கள்.
இப்படிச் சொந்த மாநிலத்திற்கும், மக்களுக்கும் எதிராக நடந்து கொள்ளும் பழனிசாமி அ.தி.மு.க. போன்ற ஒரு நாணயமற்ற கட்சியை உலக வரலாற்றிலேயே யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதுதான் பழனிசாமி அ.தி.மு.க. அடிமைகளிடம் மறுபடியும் தமிழ்நாடு சிக்கலாமா? சிக்கினால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்குமா? நிச்சயம் இருக்காது. அதைத் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டை அடிமை அ.தி.மு.க.விடமும் இருந்தும் – மதவாத பா.ஜ.க.விடமும் இருந்தும் பாதுகாக்க வேண்டும்.
சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குத் கொள்கைகளும் இல்லாத பழனிசாமி, அவதூறு பரப்புகிறார். அதுவும் எப்படி? அசிங்கமாகப் பேசுவதையும், சாபம் விடுவதையும்தான் தன்னுடைய பிரச்சாரமாக இப்போது வைத்திருக்கிறார். சுயநலத்திற்காகத் தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுக்கத் துணிந்துவிட்ட பழனிசாமிக்குத் தமிழ்நாடு பதினோராவது தோல்வியைக் கொடுக்க வேண்டும். வெகுமானத்திற்காகத் தன்மானத்தை இழந்து இனமானத்திற்குத் துரோகம் செய்யும் அடிமைக் கூட்டத்திற்குத், தமிழ்நாடு சரியான பாடம் புகட்ட வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், பாசிச பா.ஜ.க.வும் – அடிமை அ.தி.மு.க.வும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் என்று வருவது எதற்காக? அ.தி.மு.க.வுக்கும் – பா.ஜ.க.வுக்கும் அளிக்கும் வாக்கு என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குப் போடப்படும் தடைக்கற்கள். இதை மக்கள் உணர வேண்டும்.
இன்றைக்குப் பிரதமர் மோடி அவர்களும் பிரச்சாரத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். நாம் பலமுறை கேட்டும் தமிழ்நாட்டிற்குச் செய்த சிறப்புத் திட்டங்கள் என்று எதையும் அவர் சொல்லவில்லை. எப்போதும் சொல்ல மாட்டார். ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தார்கள் என்று உண்மைக்குப் புறம்பாகப் பிரசாரம் செய்வார்.
பிரதமருக்கு ஒரேயொரு விஷயத்தை நான் பணிவுடன் ஞாபகப்படுத்துகிறேன். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை 2023–இல் கொண்டு வந்தபோது, தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைவரும் முழுமையாக ஆதரித்தோம். அதனால்தான் அதை உங்களால் நிறைவேற்ற முடிந்தது. அந்தச் சட்டம் நிறைவேற்றியது, செப்டம்பர் 2023. 31 மாதமாக என்ன செய்தீர்கள்?
இப்போது தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்க வேண்டும் என்று கருப்புச் சட்டமான தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டு வந்துதான், 31 மாதமாக மூலையில் போட்ட சட்டத்தை உங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களுக்கு மகளிர் முன்னேற்றத்தின் மேல் எல்லாம் அக்கறை கிடையாது. ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவார் கும்பல்களின் பிற்போக்குவாதங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு நன்றாகவே தெரியும். அதனால் உங்கள் பொய்களை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள். ஏனென்றால், பெண்களுக்கு உள்ளாட்சிகளில் ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்தது இந்த ஸ்டாலின்தான்.
எதைப் பற்றியும் அடிப்படைப் புரிதல் இல்லாமல் தயவுசெய்து பேசாதீர்கள் பழனிசாமி. பா.ஜ.க. கொடுத்த டூல் கிட் எடுத்துக் கொண்டு வந்து, தமிழ்நாட்டின் வெற்றியைத் திசை திருப்பிப் பேசிக்கொண்டு இருக்கிறார். தலைகுனிந்து, முதுகு வளைந்து, தரையில் ஊர்ந்து, கால்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட அடிமைசாமிக்குத், தமிழ்நாடு தலைநிமிர்ந்து போராடி வெற்றி பெறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஸ்டாலின் எதற்காக இதைக் கொண்டாடுகிறார் என்று கேட்கிறார் பழனிசாமி. தமிழ்நாட்டின் எழுச்சியை நான் கொண்டாடுகிறேன். தமிழ்நாட்டின் ஒற்றுமையை நான் கொண்டாடுகிறேன். நீங்கள் பதவி வெறிக்காக பா.ஜ.க.வின் பாதம்தாங்கியாக மாறி, பிறந்த தமிழ் மண்ணுக்கே துரோகம் செய்யத் துணிந்தீர்கள். பதவிக்காக உங்கள் தன்மானத்தை அடகு வைத்தீர்கள். அது பற்றித் தமிழ்நாட்டில் ஒருவருக்கும் கவலை கிடையாது. ஆனால் இனமானத்தை அடகு வைத்துப் பிழைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
பழனிசாமியின் பச்சோந்தித்தனத்தைப் பார்த்துத் தமிழ்நாடே இன்றைக்கு சிரித்துக் கொண்டிருக்கிறது. இப்படியுமா ஒரு மனிதர் இருப்பார் என்று, உங்களை அரசியல் அவமானமாக நினைக்கிறது. உங்களுக்குத் துணிவு இருந்தால் மகளிர் இடஒதுக்கீட்டை எந்தவித கண்டிஷனும் போடாமல் இன்றைக்கே நிறைவேற்றுங்கள் என்று, உங்கள் ஓனர் பிரதமர் மோடியிடமும், அமித் ஷாவிடமும் சொல்லுங்கள் பார்ப்போம்.
இன்றைக்குக்கூட தி.மு.க. சார்பில் மகளிர் இடஒதுக்கீட்டிற்காகத் தனிநபர் மசோதா கொண்டு வந்தார்களே... அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று உங்கள் ஓனர்களைப் பார்த்து கேளுங்கள் பார்ப்போம். ஒரே ஒரு நிமிடம் முதுகை நிமிர்த்திக் கேள்வி கேட்கப் பழனிசாமி தயாரா?. தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்க முயற்சி செய்து தோற்றுவிட்டுத், தமிழ்நாட்டிற்கு எதிராகச் செயல்பட ஒன்றுசேர்ந்துள்ள என்டிஏ கூட்டணியைத், தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். பாடம் புகட்ட வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.