புதுச்சேரி: தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், புதுச்சேரி நட்சத்திர விடுதியில் தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, புதுச்சேரிக்கு நேற்று மாலை விரைந்து வந்து, அங்கு தங்கியிருந்த எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று 108 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை அளித்திருக்கிறது.
பிற கட்சிகளின் ஆதரவை பெறுவதில் தவெக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு வந்து தங்குமாறு போன் மூலம் அக்கட்சி தலைமை அறிவுறுத்தியது.
தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த எம்எல்ஏக்கள் தங்கும் ஏற்பாடுகளை சி.வி.சண்முகம் செய்துள்ளார்.
இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்தார். அவருடன் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோரும் வந்தனர்.
புதுச்சேரி நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுடன் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை நடந்த அறையில் எம்எல்ஏக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு வந்த பழனிசாமி 8.15 மணிக்கு புறப்பட்டார். அவர் அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களிடம் முக்கிய ஆலோசனை நடத்தி விட்டு சென்றதாகவும், அவர்களிடம் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிகிறது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்காமல் பழனிசாமி புறப்பட்டார். முன்னதாக எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்திய பழனிசாமி, புதிய ஆட்சி அமைவதில் தற்போது நிலவும் அசாதாரண சூழலை குறிப்பிட்டதோடு, ‘நம்மிடம் இரண்டுவிதமான வாய்ப்புகள் உள்ளன.
ஒன்று, தவெகவை ஆதரிப்பது அல்லது வேறுவிதமான கூட்டணியை (திமுக ஆதரவுடன்) உருவாக்குவது’ என்று குறிப்பிட்டுள்ளார். அப்போது, எம்எல்ஏக்கள் அவரவர் கருத்துகளைத் தெரிவிக்க, அதை மிகவும் கூர்ந்து கவனித்து பழனிசாமி உள்வாங்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
இறுதியாக, “பொறுத்தால் சாதிக்கலாம். யாரும் அவசரம் காட்டத் தேவையில்லை. நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இரண்டு நாட்கள் மட்டும் காத்திருங்கள்” என்று அறிவுரை கூறியிருக்கிறார் பழனிசாமி.
சட்டப்பேரவை குழுத் தலைவர்
முன்னதாக பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.