

சென்னை: ‘சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கடந்த காலங்களை போலவே தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் மத்திய அரசு தற்போதும் இடையூறு செய்து வருகிறது.
அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்துக்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பாஜக கடைபிடித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாகவே தவெக தலைவர் விஜய்யை பதவியேற்க அழைக்காமல் ஆளுநர் காலம் கடத்தி வருகிறார். இது ஏற்புடையதல்ல.
எனவே, வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய்யை உடனடியாக பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன்: சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க வழிவகுக்கும் தெளிவான தீர்ப்பை வாக்காளர்கள் வழங்கவில்லை. இருப்பினும் தவெகவுக்கு 108 இடங்களை வழங்கியுள்ளனர்.
இதன் அடிப்படையில் ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். பதவியேற்பு விழாவுக்கு முன்பு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்துவது பொருத்தமற்றது.
தனிப்பெரும் கட்சியாக தவெக இருப்பதால், அரசியலமைப்பின்படி, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரால் அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: பாஜக, அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழக அரசியலில் தலையீடு செய்து குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தனிப் பெரும் கட்சியாக மக்களால் தவெக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எனவே, விஜய்யை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் காட்டும் வழிகாட்டுதல். ஆனால், ஆதரவு கோரிய நிலையில் இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குழப்பத்தை ஏற்படுத்த இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையது அல்ல.
மநீம தலைவர் கமல்ஹாசன்: விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழக மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள்.
இது மாநிலத்துக்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம். ‘பெரும்பான்மையை சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நடிகர் பிரகாஷ் ராஜ், விஷால் ஆகியோரும் விஜய்க்கு ஆளுநர் வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.