பழநி: பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த விவகாரம் தொடர்பாக மாவட்டப் பதிவாளர், சார்பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர், திமுக நிர்வாகி உள்பட 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் அதிகாலை 4 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார் விசாரித்து வரும் நிலையில், நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைத்துரை மற்றும் பழநி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே, நேற்று திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டுக்கு காலை 8 மணிக்கு வந்த சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார் பிற்பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர். அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றம் ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஆக.3-ம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், நிலத்தை வாங்கியவர்களில் ஒருவரான பழநி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி வீட்டில் 2 மணி நேரம் சோதனையிட்டனர். சேதுபதி தலைமறைவாக உள்ள நிலையில், அவரது மனைவியிடம் மட்டும் விசாரித்துவிட்டு, அவரது மொபைல் போன், சேதுபதி தொடர்பான ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர்.
மேலும், பழநி இடும்பன் மலை அடிவாரத்தில் உள்ள சேதுபதியின் நெருங்கிய நண்பரான திமுக வார்டு செயலாளர் லட்சுமணன் வீட்டுக்கு அதிகாலை 4 மணிக்கு வந்த சிபிசிஐடி போலீஸார், 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையிட்டனர். அங்கு சேதுபதி தொடர்பான ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால், லட்சுமணன் சம்பந்தப்பட்ட சொத்து பத்திரங்களை எடுத்துச் சென்றனர்.
லட்சுமணன் மாரடைப்பு காரணமாக, கடந்த 3 நாட்களுக்கும் மேலாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பத்திரத்தில் சாட்சி கையெழுத்திட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதேபோல், சேதுபதியின் இன்னொரு நண்பரான பழநி பொன்னாபுரத்தில் உள்ள மயில்சாமி என்பவரது வீடு மற்றும் தோட்டத்தில் சோதனையிட சென்றபோது, அவர் இல்லாததால் பிற்பகல் வரை காத்திருந்து சோதனை நடத்தினர்.
இவர்கள் மட்டுமின்றி,தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்ய உதவியாக இருந்த ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த நிலத்தரகர் ஜெயபிரகாஷ் மற்றும் பத்திர எழுத்தரும், வழக்கறிஞருமான விருப்பாச்சியைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோரது வீடுகளிலும் 4 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இவர்கள் இருவரும், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, பழநி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு காலை 10 மணிக்கு சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் வந்தனர். அங்கு பதிவாளர்கள், அலுவலர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது, ஜூலை 6-ம் தேதி நடைபெற்ற பத்திரப்பதிவு ஆவணங்கள், பதிவுக்கு வந்தவர்களின் விவரங்கள், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர், பழநி ரயில் நிலைய பகுதியில் உள்ள மாவட்டப் பதிவாளர் சசிகலா வீட்டிலும் சோதனை நடத்தினர்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைத் துரை வீட்டில் கோவை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் கேசவன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தச் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். இதில் நிலப்பதிவு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல், அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளிலும் விசாரணை நடத்தினர்.
நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முயன்ற கடந்த மார்ச் மாதம் முதல், நிலத்தை விற்றவர், வாங்கியோர், நிலத்தரகர் ஆகியோருடன் நேரடியாகவும், மொபைல் போன் மற்றும் வாட்ஸ் அப் அழைப்பு, ஆடியோ மெசேஜ் மூலமும் தொடர்பில் இருந்த பலரிடமும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
நெல்லையிலும் விசாரணை: நிலமோசடி பத்திரப்பதிவை திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் செய்து கொடுத்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி டவுன் சாலை தெரு சண்முகசுந்தரம், பாளையங்கோட்டை குமரகுருபரன், சிவகுமார், ஆகியோருக்கு இந்த பத்திரப்பதிவு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், டவுன் சாலியர் தெருவில் வசித்து வரும் சண்முகசுந்தரத்திடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பந்தல் அலங்காரம் செய்துவரும் சண்முகசுந்தரத்திடம் நேற்று காலை முதல் நீண்ட நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. நேற்று மாலை மற்ற இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.