தமிழகம்

பழநி கோயில் நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனுக்கள் மீது புதன்கிழமை தீர்ப்பு

கி.மகாராஜன்

மதுரை: பழநி கோயில் நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனுக்கள் தீர்ப்புக்காக புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பழநி கோயிலுக்கு சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் தனிநபர் பெயருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். அவருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

இந்த முன்ஜாமீன் மனுக்கள் நீதிபதி ராஜசேகர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மூடி முத்திரையிட்ட உறையில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்த மோசடியில் மனுதாரர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மனுதாரர்கள் இருவரும் பத்திரப்பதிவு தொடர்பாக பல மணி நேரம் செல்போனில் பேசியுள்ளனர்.

முன்பு பணிபுரிந்த சார் பதிவாளர் சொத்து கோயிலுக்கு சொந்தமானது என்றும், வழக்கு நிலுவையில் உள்ளது என மினிட் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் விடுமுறை நாளில் பணிக்கு வந்த மனுதாரர் பத்திரப்பதிவை நிறைவு செய்து ஆவண எண் வழங்கியுள்ளார். முந்தைய பதிவாளரின் குறிப்பை பார்த்து பத்திரப்பதிவை நிறைவு செய்யாமல் விட்டிருக்கலாம். அதை செய்யத் தவறிவிட்டார் அவர் இதே போல் 2 மோசடிகளில் ஏற்கெனவே ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இதனால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

சார்பதிவாளர் தரப்பில், இடைக்கால ஜாமீன் காலத்தில் மனுதாரர் விசாரணைக்கு தவறாமல் ஆஜராகினார். ஆனால், போலீஸார் அவரை விசாரிக்காமல் அலைக்கழித்துள்ளனர். சார்பதிவாளர் மீதான முந்தை வழக்கில் அமைச்சருக்கு தெரிந்த பெண் பத்திரம் பதிவு செய்ய வந்துள்ளார். அவர் அளித்த ஆவணம் சரியாக இல்லாததால் பதிவு செய்ய மறுத்துள்ளார். இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.

அதற்கு நீதிபதி, இந்த வழக்கை மட்டும் பேசுங்கள் என்றார். தொடர்ந்து சார்பதிவாளர் தரப்பில், முந்தைய பதிவாளர் விடுமுறையில் சென்றதால் மாவட்ட பதிவாளர் மனுதாரரை நியமித்துள்ளார். மாவட்ட பதிவாளரின் உத்தரவை நிராகரிக்க முடியாது. விடுமுறைக்கால பணியின்போது தனி நீதிபதி உத்தரவின்பேரில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பத்திரத்துக்கு ஆவண எண் வழங்கி மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பி உள்ளார்.

மனுதாரரின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோதுதான், அரசு தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. அதுவரை அரசு தரப்பில் மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை. மனுதாரருக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. அதிகாரத்தை மீறி செயல்படவில்லை. எனவே நிரந்தர முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை புதன்கிழமைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT