தமிழகம்

“மாணவர்கள் போராடுவதற்கு இடம் ஒதுக்கித் தாருங்கள்” - முதல்வருக்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்

டெக்ஸ்டர்

சென்னை: மாணவர்கள் போராடுவதற்கான ஒரு இடத்தை அரசே நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: “தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை காவலர்கள் அடிக்கும் வீடியோக்களை முதல்வர் பார்க்கவில்லையா? ஏன் காவலர்களை வைத்து அவர்களை ஒடுக்கவேண்டும்? நீங்கள் நீட் எதிர்ப்பாளர்தானே? நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை திட்டம் உங்களுக்கு இருக்கிறது. நீங்களே ஒரு பெரிய இடம் கொடுங்கள். அங்கே மாணவர்கள் அறவழியில் போராடட்டும். மாணவர்களின் குரல்களுக்கு செவிசாயுங்கள்.

மாணவர்கள் போராடுவதற்கான ஒரு இடத்தை அரசே நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும். உங்களோடு சேர்ந்து நாங்களும் போராடுகிறோம். நீங்கள் கனவு கண்டபடி நீட்டை ஒழிக்கலாம் வாருங்கள் முதல்வரே. எதற்காக மெரினா கடற்கரையை மூடவேண்டும்? மக்களோடு சேர்ந்து நிற்கும் முதல்வராக நீங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்” இவ்வாறு பா.ரஞ்சித் பேசினார். 

SCROLL FOR NEXT