முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் |கோப்புப் படம்

 
தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை: திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

வெற்றி மயிலோன்

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி குறித்த குழப்பம் நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று (மார்ச் 3) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் பேசியது பரபரப்பை உருவாக்கியது. இன்னும் சில தலைவர்கள் தவெக தரப்பிலும் பேசி வந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும், இறுதி முடிவு எட்டப்படாததால் கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவியது. மேலும், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா அல்லது தவெக பக்கம் செல்லுமா என்று பரபரப்பும் நிலவியது.

          

காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் 36 தொகுதிகளும், 2 ராஜ்ய சபா சீட்டும் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், திமுக கடந்த முறை கொடுத்த 25 தொகுதிகளை அளிப்பதாக தொடர்ந்து சொல்லி வந்தது. இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுக்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது கிட்டத்திட்ட முடங்கிப்போனது.

இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று மதியம் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது திமுக எம்.பி. கனிமொழியும் உடனிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது திமுக 29 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் இரு ராஜ்ய சபா சீட் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறும்போது, “திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது, முடிந்த பிறகு உங்களிடம் அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.

இந்தப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்ததாகவும், திமுக தலைவருடனான பேச்சுவார்த்தை குறித்து சிதம்பரம் ராகுல் காந்தியிடம் விவரங்களை தெரிவிப்பார் என்றும், ராகுல் காந்தி விரைவில் முடிவை அறிவிப்பார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “அவர்கள் (காங்கிரஸ்) கேட்பது வேறு, நாம் (திமுக) சொல்வது வேறு. திமுக - காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தை சுமுகமாக முடிக்கவே எங்கள் தலைவர் (முதல்வர் ஸ்டாலின்) விரும்புவார். காங்கிரஸார் இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்கள் என்றாலே பழைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள். இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்” என்றார்.

முன்னதாக, கே.சி.வேணுகோபால் மற்றும் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுடன் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்கள். “திமுக 25 இடங்களைத்தான் தருகிறது, நாம் என்ன முடிவு எடுக்கலாம்?” எனக் கேட்டதற்கு, எம்.எல்.ஏ-க்கள் தரப்பில், “நாம் கூட்டணியை விட்டு வெளியேறினால், அது பாஜக தமிழகத்தில் காலூன்ற நாமே சிவப்புக் கம்பளம் விரிப்பது போலாகிவிடும்.

நடிகர் விஜய்க்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சொந்தக் கட்சிக்கே பிரசாரத்திற்கு வராத அவர், புதுச்சேரி மற்றும் கேரளாவில் காங்கிரஸிற்காக வருவாரா என்பது சந்தேகமே. எனவே, தவெக-வுடன் கைகோர்ப்பது இப்போதைக்குச் சரியாக இருக்காது. முதல்வரிடம் பேசி கூடுதல் இடங்களைப் பெற முயற்சிப்பதே அரசியல் ரீதியாகச் சரியான முடிவாக இருக்கும். இருப்பினும், தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றத் தயார்” எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT