தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன.

இதையடுத்து, கூட்டணி, தொகுதி பங்கீடு, விருப்ப மனு வாங்குவது, பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் நடத்துவது என அனைத்து கட்சியிலும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, திமுகவுடன் கூட்டணி உடன்பாடு வைத்து, தொகுதி பங்கீட்டை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், திமுகவில் அடுத்த மாதம் தான் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட இருப்பதால், அதன் பிறகே தொகுதி பங்கீடு குறித்து பேச முடியும் என திமுக மேலிடம் தெரிவித்துள்ளது.

அதிகாரத்தில் பங்கு கோரிக்கை: இதனால், காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை இன்னும் கணிக்க முடியாமல் உள்ளனர். அதேநேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி இருக்கிறார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

சுமார் 15 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பில் சட்டக் கல்லூரி தொடங்குவது குறித்து ப.சிதம்பரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் கூட்டணி குறித்தும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT