ப.சிதம்பரம் (கோப்புப் படம்) 
தமிழகம்

SIR | “இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா?” - ப.சிதம்பரம் வியப்பு

செய்திப்பிரிவு

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பின்னர் தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச.19) வெளியிடப்பட்டது. அதன்படி தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26,32,672 மற்றும் இரட்டைப் பதிவுள்ளவர்கள் எண்ணிக்கை 3,39,278 என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது.

எல்லா அரசியல் கட்சிகளின் தோழர்களும் இந்த எண்ணில் கவனம் செலுத்தவேண்டும். இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மெய்யான நபர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ம் தேதி (இன்று) வெளியானது. இறந்தவர்கள், இரட்டை பதிவுகள், முகவரி மாறியவர்கள் என்று நீக்கப்பட்ட வாக்காளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் விவரம்:

* குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66.4 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

* வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் 3.98 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

* இறந்தோர் 26.9 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் 5.43 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT