ஈரோடு: ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சு.முத்துசாமியை ஆதரித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச் சருமான ப.சிதம்பரம் சூரம்பட்டி யில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: வட இந்தியாவில் பாஜக செல்வாக்கு மிகுந்த கட்சி. நான் மறுக்கவில்லை. ஆனால், அரசியல் சாசனத்தை திருத்தக்கூடாது என்பதற்காக தான் பாஜகவுக்கு வடமாநிலத்தினர் வாக்களித்தனர். எனினும், மூன்றில் இரு பங்கு தரவில்லை. அதனால் அரசியல் சாசனம் பிழைத்தது என நினைத்தோம்.
ஆனால் அரசியல் சாசனத்தை சீரழிக்க விரும்புகிறவர்கள் என்பதை நிருபிக்க நாளை (ஏப்.16) நாடாளுமன்றம் கூடுகிறது. ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் சமயத்தி்ல் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர்.
இதற்கு காங். மூத்த தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த கூட்டத்தில் தொகுதிகள் மறுவரை செய்யப்பட உள்ளன. இதில் தென்னிந்தியாவின் பலம் மிக மிக குறையும். வட இந்தியாவின் பலம் கூடும். இது தொடர்பாக பழனிசாமியிடம் கேட்டபோது, ‘நான் அமித்ஷாவிடம் கேட்டேன். அவர் பாதகம் வராது என கூறினார். அதனால் தமிழகத்துக்கு பாதகம் வராது’ என கூறுகிறார்.
இதற்கு எதற்கு அதிமுக என்ற ஒரு கட்சி. அவர்கள் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டனர். பழனிசாமி அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டார். பொம்மலாட்டத்தில் பழனிசாமி பொம்மை தான். நூலை ஆட்டுபவர் அமித்ஷா தான், என்றார்.