கோப்புப் படம்
சென்னை: ஹோட்டல், கிளப் பார்களுக்கான உரிமக் கட்டண உயர்வு முடிவை நடைமுறைப்படுத்துவதில் கால அவகாசம் வழங்க வேண்டும். உரிமங்களை எளிதாக பெற ஒற்றை சாளர முறையை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு, தமிழ்நாடு ஓட்டல் மற்றும் கிளப் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சங்கத்தின் தலைவர் சி.சரவணன், பொதுச்செயலாளர் பிரகாஷ் ஆகியோர், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மனமகிழ் மன்றம், தனியார் நட்சத்திர விடுதி, சர்வதேச கிளப்களில் மொத்தம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு எஃப்.எல்-2, எஃப்.எல்-3, 3ஏ உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னையில் எஃப்.எல்-2 உரிமத்துக்கான ஆண்டு கட்டணம் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப ரூ.25 லட்சம், ரூ.15 லட்சம் என கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, இந்த ஆண்டுக்கான முழு கட்டணமாக ரூ.15 லட்சத்தை கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே நாங்கள் செலுத்திவிட்டோம். தற்போது, ஜூன் மாதத்தில் அரசாணை வெளியிட்டு, அதனை ஏப்ரல் மாதத்தில் இருந்தே கணக்கிட்டு, விடுபட்ட மீதி ரூ.15 லட்சத்தை ஆகஸ்ட் மாதத்துக்குள் உடனடியாக கட்ட வேண்டும் என நெருக்கடி தருகின்றனர்.
இதையொட்டி, தேர்தலுக்கு முன்பும், பின்னரும் எஃப்.எல்-2, எஃப்.எல்-3 உரிமங்களுக்கான விண்ணப்பங்களும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், புதிய ஆட்சி பொறுப்பேற்ற இந்த 50 நாட்களில் இதுவரை ஒரு புதிய உரிமம் கூட வழங்கப்படவில்லை.
இதனால் சிறு மற்றும் நடுத்தர ஓட்டல், கிளப் உரிமையாளர்கள் வாடகை மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பொருளாதார சுமையை சந்தித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு இக்கட்டண உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்தாமல், குறைந்தது 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள புதிய உரிமங்களுக்கான விண்ணப்பங்களையும், புதுப்பித்தல் கோப்புகளையும் விரைந்து பரிசீலித்து உரிமங்களை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஒரு ஓட்டல் அல்லது கிளப் பாருக்கு கிட்டத்தட்ட 20 உரிமங்கள் பெற வேண்டியுள்ளது.
இதற்கு 2 ஆண்டுகள் வரை ஆகின்றன. அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 30 முதல் 45 நாட்களுக்குள் ஒற்றை சாளர முறையில் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
அதே போன்ற எளிய முறையை, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். வணிக நேரத்தையும் மதியம் 12 முதல் இரவு 12 மணி வரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.