சென்னை: நகைப்பட்டறையில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்து சிக்கி உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஊழியர்கள் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டை, சிங்கண்ணன் தெருவில், 4 மாடிக் கட்டிடத்தில் நகைப்பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த சுமன் பால் பி சோகித் (35) என்பவர் இந்த நகைப்பட்டறையை நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி பாயல்பாகு என்ற மனைவியும், 4 வயதில்பெண் குழந்தையும் உள்ளனர். இந்த பட்டறையில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இங்கு பழைய மற்றும் புதிய தங்கத்தை உருக்கி புதிய நகைகள் தயாரித்து சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் 4-வது மாடியில் உள்ள நகைப்பட்டறையில் ஊழியர்கள் வழக்கம்போல் நகைகளை உருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து ஊழியர்கள் 7 பேர் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர்.
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் பி சோகித் உட்பட 7 பேரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நகைப்பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார்.
மேலும் நகைப்பட்டறை ஊழியர்களான மேற்குவங்கத்தைச் சேர்ந்த அரவிந்த் தாக்கல் (27), ஜாந்தோ இந்திரஜித்(40), சிமந்தோமால் (47), ராகேஷ் டேலி (26), ஆனந்து (32), சூரஜ் (25) ஆகியோர் 70 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து யானைக்கவுனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.