சென்னை: மின்சார வாரியத்தில் மின் கம்பிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றது எப்படி என லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் 2020-21 முதல் 2022-23 வரையிலான நிதியாண்டுகளில் மின் கம்பிகள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 19-ம்தேதி மின்பகிர்மானக் கழக ஊழியர்கள், மின் கம்பி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்.) இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் விவரம் வருமாறு: விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 9 டெண்டர்களில் மொத்தம் 2 லட்சத்து 7,495 கி.மீ. நீள மின்கம்பிகளை கொள்முதல் செய்ய, ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 2022-23 நிதியாண்டில் குறிப்பிட்ட வகை மின் கம்பிகளை கொள்முதல் செய்ய சுமார் ரூ.170 கோடி மதிப்பில் 40 ஆயிரம் கி.மீ. மின்கம்பிகள் வாங்க டெண்டர் கோரப்பட்டது.
இதில் 24 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 5 நிறுவனங்கள் ஒரு கி.மீட்டருக்கு ரூ.44,356.20 என ஒரே விலையை குறிப்பிட்டிருந்தன. பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.41,536 என இறுதி விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அரசின் மதிப்பீட்டின் படி இதன் அடக்கவிலை ரூ.38,858.07 மட்டுமே. இது இறுதி செய்யப்பட்ட விலையை விட 6.89 சதவீதம் குறைவு ஆகும். இருப்பினும், 24 நிறுவனங்களுக்கும் ரூ.166 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, 2020-21-ம் ஆண்டில் ரூ.107.74 கோடி மதிப்பில் 15,000 கி.மீ. ஏசிஎஸ்ஆர் (ACSR) வகை மின் கம்பிகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதில் தகுதிபெற்ற 31 நிறுவனங்களும் பைசா மாறாமல் கி.மீட்டருக்கு ரூ.75,048 என்ற ஒரே தொகையை குறிப்பிட்டிருந்தன. பேச்சுவார்த்தைக்கு பின் ரூ.74,340 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இதற்கான அரசு மதிப்பீட்டு விலை ரூ.71,826.66 மட்டுமே.
நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பீட்டை விட 3.49 சதவீதம் அதிகம் இருந்தபோதிலும், 30 நிறுவனங்களுக்கு ரூ.111.51 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், சில டெண்டர்களில் பல்வேறு நிறுவனங்கள் சமர்ப்பித்த ஏல விண்ணப்பங்கள் ஒரே அல்லது ஒரே மாதிரியான ஐபி (IP) முகவரிகளில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட சில வகை மின் கம்பிகள் தரம் குறைந்தவையாக இருந்ததால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எஃப்ஐஆர்-ல் கூறப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் யாருடைய பெயரும், நிறுவனங்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.