

அமைச்சர் ரமேஷ்
சென்னை: கோயில் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்றும், கோயில் பணியாளர்களை தேர்வு செய்ய புதிய தேர்வு வாரியம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட 106 அறிவிப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், வெளியிட்ட அறிவிப்புகள்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 64 கோயில்களில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். சிதிலமடைந்த 150 கோயில்கள் மற்றும் இதர 152 கோயில்களில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெறும். கோவை, தேனி, திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களில் ரூ.22.25 கோடி மதிப்பீட்டில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்படும்.
மருதமலை, குன்றத்தூர், சமயபுரம், குலசேகரன்பட்டினம் ஆகிய கோயில்களில் பக்தர்களுக்காகப் புதிய மண்டபங்கள், இளைப்பாறு கூடங்கள் மற்றும் முடி காணிக்கை மண்டபம் கட்டப்படும். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் ரூ.8 கோடியில் பாதுகாப்பு அறைகள், பாலூட்டும் அறைகள் மற்றும் வரிசை மண்டபங்கள் அமைக்கப்படும். சிறுவாபுரி மற்றும் சமயபுரம் கோயில்களில் ரூ.9 கோடியில் ஒருங்கிணைந்த வரிசை மண்டபங்கள் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சென்னை கொளத்தூர், நுங்கம்பாக்கம், வேளச்சேரி கோயில்களில் ரூ.2 கோடியில் புதிய மரத்தேர்கள் செய்யப்படும். மேலும், பழுதடைந்த 25 தேர்கள் ரூ.16 கோடியில் சீரமைக்கப்படும். மாநிலம் முழுவதும் சிதிலமடைந்த 100 கோயில் குளங்கள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.11 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
பக்தர்களின் வசதிக்காகத் திருச்செந்தூரில் 4 சிற்றுந்துகளும், நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு 2 பேருந்துகளும் கட்டணமில்லாச் சேவையாக இயக்கப்படும். 20 கோயில்களுக்கு அவசர கால ஊர்திகளும், 38 கோயில்களுக்குச் சக்கர நாற்காலிகளும் வழங்கப்படும். கன்னியாகுமரி மற்றும் மருதமலையில் புதிய அன்னதானக் கூடங்கள் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்படும்.
பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு 240 நாட்களாக அதிகரிக்கப்படும். பணியாளர்களின் வாரிசுகளுக்குக் கல்லூரிப் படிப்பில் முன்னுரிமை மற்றும் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும். கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய ‘பணியாளர் தேர்வு வாரியம்’ அமைக்கப்படும்.
ஆண்டுதோறும் 10ஆயிரம் மூத்த குடிமக்கள் முக்கிய கோயில்களுக்கு ஒருநாள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். 2 ஆயிரம் பக்தர்களுக்கு கோயில்களின் வரலாறு மற்றும் சிற்பக்கலையை அறிய ‘வெற்றி கலை அறிவுசார் கோயில் பயணம்’ ஏற்பாடு செய்யப்படும்.
தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் ரூ.3 கோடியில் மீண்டும் நடத்தப்படும். காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி முக்கிய கோயில்களில் பொது விருந்து மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். மேலும், முருகனின் அறுபடை வீடுகளை முன்மாதிரி கோயில்களாக மாற்றத் திட்ட அறிக்கை தயாரிக்கப் படும் என்பது உள்ளிட்ட 106 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.