வி.ஆர்.சுவாமிநாதன் |கோப்புப் படம்
கோவை: 1971-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் பங்கேற்று இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் பிரிகேடியர் வி.ஆர்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு வயது 94.
1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த வங்கதேச விடுதலைப் போரின்போது, 22-வது மராத்தா லைட் காலாட்படையின் கட்டளை அதிகாரியாக இருந்து ஹில்லி என்ற போர்க்களத்தில் தனது படையை வழிநடத்தியவர் வி.ஆர்.சுவாமிநாதன். ஹில்லி போர்க்களத்தில் பாகிஸ்தான் படையைச் தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்.
போர்க்களத்தில் தோல்வியை தழுவிய ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள், வி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் சரணடைந்தனர். அந்த வகையில் போர் கதாநாயகராக அறியப்படுபவர் இவர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைவதை இளம் ராணுவ அதிகாரி வி.ஆர். சுவாமிநாதன் ஏற்றபோது...
வங்கதேச விடுதலைப் போருக்கு முன்பாக 1961 கோவா விடுதலையிலும், நாகாலாந்து கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் பங்கேற்றவர் வி.ஆர்.சுவாமிநாதன். ராணுவத்தில் பிரிகேடியர் நிலைக்கு உயர்ந்த இவர் 1986-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
வயது முதிர்வு காரணமாக மூச்சு விடுவதில் சிரமத்தைச் சந்தித்து வந்த வி.ஆர்.சுவாமிநாதன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 14) அவர் காலமானார். அவரது மனைவி வசந்தி ஏற்கெனவே காலமாகிவிட்டார்.
இந்த தம்பதியருக்கு தரங்கிணி, தீபா, ஜோதி ஆகிய மூன்று மகள்கள். மூன்றாவது மகள் இறந்துவிட்டார். அருண், சுரேஷ், சேஷாத்ரி ஆகிய மூன்று மருமகன்களும் பேரக்குழந்தைகளும் இவருக்கு உள்ளனர். வி.ஆர். சுவாமிநாதனின் இறுதிச் சடங்குகள் கோவையில் நாளை (மார்ச் 15) நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.