சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய காலக்கெடுவுக்குள் சரியான தகவலை வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரா.கோபிநாத் என்பவர், திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் கூட்டத்தில் தான் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டிருந்தார்.
ஆனால், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பொதுத் தகவல் அலுவலரால் வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தி அளிக்காததால், அவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த தகவல் ஆணையம், செப்.24 அன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
அதன்படி இனி வருங்காலங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலை குறித்த காலத்துக்குள் மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.