சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என ட்விட்டரில் பதிவு வெளியிட்டது, திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து தெரிவித்ததாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வழக்குகளை விசாரித்த எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 2024-ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, மாதத்தின் முதல் வேலைநாளன்று விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்று நிபந்தனை விதித்தது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தி்ல் நேரில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு
மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, நிபந்தனையை தளர்த்தி, ஹெச்.ராஜாவுக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.