சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு விரைவில் சிறப்பு ஓய்வூதியம் குறித்த ஆணை வெளியிடப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களின் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாகவும், தகுதி வாய்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியதாரர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாகவும், ஆண்டுதோறும் பணியில் உள்ள அரசு பணியாளர்கள் வழங்கப்படுவதற்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடையும் வழங்குதல் உட்பட பல்வேறு அம்சங்களுடன் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு நிகரான ‘தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஓய்வூதிய நிதியத்துக்கு முதல் கட்டமாக ஒரு முறை பங்களிப்பாக ரூ.13 ஆயிரம் கோடி, ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ.11 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்கும். கடுமையான நிதி நெருக்கடியிலும் அரசு பணியாளர்கள் நலனுக்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோன்று சிறப்பு காலமுறை ஊதிய முறையில் பணியாற்றி வரும் பணியாளர்களின் சிறப்பு ஓய்வூதியம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை அரசு பரிசீரித்து உரிய ஆணைகளை விரைவில் வெளியிடும்.
பழமையான கோயில்கள்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்களை ரூ.425 கோடியில் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 76 கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. தமிழகமெங்கும் ரூ.8,057 கோடியில் 28,229 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் ஹஜ் பயணிகளின் நலனுக்காக சென்னையில் ரூ.39 கோடியில் ஹஜ் இல்லம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த 2023 நவம்பர் முதல் 2025 மார்ச் மாதம் வரை ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. இதன்படி 4,835 முகாம்கள் நடத்தப்பட்டு, 23.49 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதையடுத்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை 36.62 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இவ்வாறு உரையில் இடம்பெற்றுள்ளது.