தமிழகம்

ரேஷன் கடைகளில் தற்காலிகமாக மகளிர் குழுவினரை நியமிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ளலாம் என கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜி.லதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஆக.31-ம் தேதி நிலவரப்படி தமிழக ரேஷன் கடைகளில் 1,714 விற்பனையாளர், 176 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை விநியோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் பணியாளர்களை தேர்வு செய்ய தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதுவரை பொது விநியோகத் திட்டப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு காலியாக உள்ள ரேஷன் கடைகளை தற்காலிகமாக நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். மாதத்தில் அதிகபட்சமாக விற்பனையாளருக்கு ரூ.7,500, கட்டுநருக்கு ரூ.6,600 வழங்கப்படும். குழுவின் வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT