சென்னை: திருவள்ளூர் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு விபத்தால் 18 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவரையும் பிஃஎப் உறுப்பினர்களாக்க வேண்டும் என்று ஆட்சியர் ச.கவிதா உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இங்கு கடந்த ஜூன் 21-ம் தேதி அமோனியா வாயு கசிந்ததால், தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 83 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். இந்த வழக்கில் 3 பேரை திருவள்ளூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.
இந்த விபத்து தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து, ‘இந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர்கள், மத்திய சுற்றுச்சூழல் துறையின் சென்னை மண்டல அதிகாரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்படுகின்றனர்.
அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக அடுத்த விசாரணையின்போது இவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
பின்னர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு ஆக.31-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, விபத்து நிகழ்ந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினராக உள்ளனரா, பிஎஃப் விதிகளின்படி, விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு 30 மாத ஊதியம் அல்லது ரூ.7 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதா என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்ததாரர் மூலமாக தொழிலாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் சில மாதங்கள் தங்கி பணிபுரியக் கூடியவர்கள். இவர்கள் அந்த நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் இல்லை. வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களாகவும் அவர்களை சேர்க்கவில்லை. பிஎஃப் நிறுவனத்தினரும் தொழிற்சாலைக்கு வந்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் ஆட்களை கொண்டு வந்து சேர்க்கும் ஒப்பந்ததாரர்கள் 100 சதவீதம் பதிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
அனைத்து தொழிலாளர்களையும் பிஃஎப் உறுப்பினர்களாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ச.கவிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.