சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேரளம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி அன்றும், தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் நடைபெறும் நாளன்று, தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளர்களும் (தினக்கூலி, தொகுப்பூதியம், வாரந்திர ஊதியம், ஒப்பந்த ஊதியம் மற்றும் மாத ஊதியம்) வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, கேரளம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி அன்று அவ்வூரைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி அன்று நடைபெறும் தேர்தலுக்கு அனைத்து தொழிற்சாலை நிறுவனங்களும் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தேர்தல் நாளன்று வாக்களிப்பது அவசியம் என்பதையும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு பொது விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் பற்றிய தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.