தமிழகம்

திமுகவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இணைப்பு விழா: மதுரை அருகே மார்ச் 7-ல் ஸ்டாலின் தலைமையில் நிகழ்வு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை அக்கட்சியில் இணைக்கும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை அருகே வரும் 7-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எவ்வித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, எக்காரணம் கொண்டும் அவரை சேர்த்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதனால், வேறு வழியில்லாமல் அதிமுகவில் 3 முறை முதல்வராக பதவி வகித்திருந்தபோதும், ஜெயலிதாவின் விசுவாசத்துக்கு அடையாளமாக கூறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் பரம எதிர்க்கட்சியாக கருதப்படும் திமுகவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

          

அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐய்யப்பன், மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்னண் உள்ளிட்டோரும் சேர்ந்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்கு வங்கி, செல்வாக்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரை திமுகவில் இணைத்துக்கொள்ள மிகுந்த ஆர்வமாக இருந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்த அவரது ஆதரவாளர்களுக்கு காலப்போக்கில், பதவிகள் அல்லது அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் உரிய அங்கீகாரமும், கட்சிப்பதவிகளும் வழங்க திமுக தலைமை உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் பணிகளில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த இணைப்பு விழா, தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மதுரைக்கு அருகே வரும் 7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் செய்து வருகிறார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், “ஓ.பன்னீர்செல்வம் கடைசி வரை அதிமுகவில் இணைவதற்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அதனாலேயே இவரை பிடிக்காமல் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் போன்றோர் திமுகவில் இணைந்தனர். ஆனால், அதன்பிறகும் பழனிசாமி மனம் இறங்கி ஓ.பன்னீர்செல்வத்தை அரவணைக்க முன் வராததால் அவர் திமுகவில் சேர்ந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தை திமுகவில் சேர்க்கும் இணைப்பு பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் அமைச்சர் சேகர் பாபுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணனும் கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் சேர எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஆனால், திமுக தலைமையோ அவருக்கு உரிய மரியாதையான கட்சிப் பதவியும், அமைச்சரவையில் முன்வரிசையில் அமரக்கூடிய முக்கிய இலகாகவும் ஒதுக்க உள்ளதாக உறுதியளித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்கு வங்கி, செல்வாக்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரை திமுகவில் இணைத்துக்கொள்ள மிகுந்த ஆர்வமாக இருந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்த அவரது ஆதரவாளர்களுக்கு காலப்போக்கில் மக்களவை, மாநிலங்களவை, வாரியப் பதவி அல்லது அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் உரிய அங்கீகாரமும், கட்சிப் பதவிகளும் வழங்க திமுக தலைமை உறுதி செய்துள்ளது.

ஓபிஎஸ் ஆரம்பித்தில் பயணித்து சென்றவர்கள், கடைசி வரை அவருடன் இல்லை. ஆனால், சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம்-1 ஆரம்பித்தபோதும், தற்போது இரண்டாம் கட்டமாக பழனிசாமியை எதிர்த்து தர்மயுத்தம்-2 ஆரம்பித்தபோதும் எந்தக் கட்சிக்கும் செல்லாமல் கடைசி வரை ஓ.பன்னீர்செல்வத்துடன் உடனிருந்த கோபாலகிருஷ்ணன், ஐய்யப்பன் எம்எல்ஏ உள்ளிட்டவர்களுக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் ‘சீட்’ கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் உரிய கட்சிப் பதவியும், அங்கீகாரமும் வழங்க உள்ளதாக திமுக தலைமை ஓ.பன்னீர்செல்வத்திடம் உறுதியளித்துள்ளது” என்று அவர்கள் அவர்கள் தெரிவித்தனர்

SCROLL FOR NEXT