ஓபிஎஸ் பேச்சு
திருநெல்வேலி: வரும் சட்டப்பேரவை தேர்தலோடு பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாங்குநேரி தொகுதி ஆலோசனை கூட்டம் நாங்குநேரி அருகே செங்குளத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ம. கிரகாம்பெல் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: “அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். எனவேதான் திமுகவில் இணைந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதேநேரத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது. இந்த நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின் தந்து கொண்டிருக்கிறார். தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி போன்ற திட்டங்களை கடந்த 2019-ம் ஆண்டிலேயே பழனிசாமி நிறுத்திவிட்டார்.
தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி. ஒரு தேர்தலிலும் அவர் வெற்றிபெறவில்லை. மக்கள் அவரை புறக்கணித்துவிட்டனர். கடந்த எம்.பி. தேர்தலில் நான் போட்டியிட்டபோது எனக்கு எதிராக என்னுடைய பெயரில் 6 பேரை நிறுத்தினர். ஆனால் அத்தனை பேரும் டெபாசிட் இழந்தனர். துரோகத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பழனிசாமிக்கு எதிராக சட்டப் பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, நான் அவருக்கு ஆதரவாக வாக்களித்தேன். அது நான் செய்த மிகப் பெரிய தவறு. ஆபத்து காலத்தில் உதவி செய்தவர்களை அவர் ஒரு நாளும் நினைத்து பார்த்தது கிடையாது. வரும் சட்டப் பேரவை தேர்தலோடு பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்” என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் ரவிந்திரநாத், கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஐயப்பன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ். ஏ. கே. சித்திக் உள்ளிட்டோர் பேசினர். பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலர் சுபாஷ் தங்கபாண்டியன் வரவேற்றார். தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அழகுமுத்து நன்றி கூறினார்.