சென்னை: தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவை அறிவிப்பதற்காக டிசம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் உரிமை உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் பாஜக கூட்டணியில் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியை தழுவினார்.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனி அணியாக போட்டியிட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது. தமிழகத்தில் அந்த கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என பாஜக அறிவித்தது. இதன் பின்னர் பாஜகவின் பார்வை ஓபிஎஸ் மீது படவில்லை. அதன்பின்னர் தமிழகம் வந்த பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோரை சந்திக்க ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
அதன் பின்னரும் அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சிகளை செய்த நிலையில் அவை பலிக்காததால், அரசியலில் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ம் தேதி அறிவிப்பதாக கூறியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்தச் சூழலில், சமீபத்தில் டெல்லி சென்ற ஓபிஎஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
இதனையடுத்து, டிசம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த ஓபிஎஸ்ஸின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், எம்ஜிஆரின் நினைவுதினமான டிசம்பர் 24ஆம் தேதி ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.