

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வின் அத்தனை தலைவர்களும், “சின்னம்மா பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று முதலமைச்சராக வரவேண்டும்” என்று மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுத்தார்கள். அப்படிச் சொன்னவர்களில் அநேகம் பேர் இப்போது அவருக்கு எதிராக நிற்கிறார்கள்.
உள்ளுக்குள் விசுவாசம் வைத்திருக்கும் ஒருசிலரும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இதனால் தனித்து விடப்பட்ட தலைவராகி இருக்கிறார் சசிகலா.
ஜெயலலிதா காலத்தில் அதிமுக-வின் அதிகார மையமே சசிகலா குடும்பம் தான். அதனால் அந்தக் கட்சிக்கு நல்லதும் இருந்தது கெட்டதும் இருந்தது. இது தெரிந்து தான் சசிகலா தரப்பை ஒரேயடியாக ஒதுக்கிவைக்க முடியாமல் தவித்தார் ஜெயலலிதா.
அதேசமயம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவின் பின்னால் பயபக்தியுடன் வந்து நின்ற அதிமுக தலைவர்களுக்கு, அவர் சிறைக்குச் சென்ற பிறகு பயமும் பக்தியும் பறந்துவிட்டது. அதனால், அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் ஒரேயடியாக கட்சியைவிட்டே தள்ளிவைத்தார்கள்.
இருந்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத சசிகலா சிறை மீண்டதிலிருந்தே, “அதிமுக-வை ஒருங்கிணைப்பேன்... அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டுவருவேன்” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். கேட்பதற்கு இது நன்றாக இருந்தாலும் ஒருங்கிணைப்புக்கான சாத்தியங்கள் தெரியவில்லை என்பது தான் நிதர்சனம்.
“அதிமுக-வை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசிவருகிறேன்” என திரும்பத் திரும்பச் சொல்லி வரும் சசிகலா, யாருடன் பேசுகிறேன்... என்ன பேசுகிறேன் என்பதை ‘சஸ்பென்ஸாகவே(!)’ வைத்திருக்கிறார்.
அதனால், என்றைக்காவது விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் அவர் பின்னால் நின்ற ஒரு சிலரும் இப்போது தங்களுக்கான வழிகளைத் தேடி போய்விட்டார்கள்.
அண்மையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த சசிகலாவுடன் அவரது உதவியாளர் மட்டுமே வந்திருந்தார். மற்றவர்கள் எங்கே என்று கேட்டதற்கு, “சின்னம்மா தான் யாரையும் வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்று சால்சாப்பு சொன்னார்கள்.
இந்தத் தேர்தலையும் விட்டுவிட்டால் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகி விடலாம். தினகரன், ஓபிஎஸ் பற்றி எல்லாம் பேசும் பாஜக, ஜெயலலிதாவுக்கு நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. சித்தியைப் பற்றி தினகரனும் கவலைப்படுவதில்லை.
தன்னை அரியணையில் அமர்த்தி அழகுபார்த்த சின்னம்மா பற்றிய பேச்சை ஓபிஎஸ்ஸும் எடுப்பதில்லை. இவர்கள் இருவரும் தங்களுக்கான வழியைத் தேடுவதில் பிஸியாக இருக்கிறார்கள். இவர்களை ஆளாக்கி பேராக்கிய சசிகலா தான் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறார் பாவம்.
சசிகலாவின் இன்றைய நிலை குறித்து நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள் சிலர், ‘‘இன்று சின்னம்மாவுக்கும் தினகரனுக்கும் விசுவாசமாக இருப்பவர்களில் பலரும், அதிகாரத்தில் இருந்த போது அவர்களால் எந்தப் பலனும் அனுபவிக்காதவர்கள் தான்.
இவர்கள் இருவராலும் பலனை அடைந்தவர்கள் தான் இப்போது இவர்களுக்கு எதிராக கச்சைகட்டி நிற்கிறார்கள். அதனால் தினகரன் தனி வழி போக ஆரம்பித்து விட்டார். ஓபிஎஸ் அதிமுக-வுக்குள் குடியேற அமித் ஷாவுக்கு அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருக்கிறார். சின்னம்மா தான் போகும் வழி தெரியாமல் நிற்கிறார்” என்றார்கள்.