ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுக இணைப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 
தமிழகம்

“விசுவாசத்துக்கு ஓபிஎஸ்... துரோகத்துக்கு இபிஎஸ்!” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சுப.ஜனநாயக செல்வம்

மதுரை: விசுவாசத்துக்கு ஓபிஎஸ், துரோகத்துக்கு இபிஎஸ் என மதுரை திருமங்கலத்தில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இணைப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை திருமங்கலம் ராயபாளையத்தில் சனிக்கிழமை அன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் தாய்க்கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

          

இவ்விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த மேடை மிக வித்தியாசமான மேடை. சில காலத்துக்கு முன்பு வரை நமது ஓபிஎஸ், இந்த மேடையில் இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் லேட்டாக இருந்தாலும் எம்ஜிஆர் இருந்த தாய்க்கழகமான திமுகவுக்குத்தான் திரும்பி வந்துள்ளார். அவருடன் வந்துள்ள உடன்பிறப்புகளையும் திமுக தலைமை தொண்டனாக மனமுவந்து வரவேற்கிறேன்.

நீங்கள் மட்டுமல்ல எம்ஜிஆருக்கு நானும் ரசிகன்தான். கழகம் எம்ஜிஆரை வளர்த்தது அவரும் கழகத்தை வளர்த்தார். கருணாநிதியை தலைவராகவும் அவர் ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட தாய்க் கழகத்துக்கு தாய் மடிக்கு நீங்கள் எல்லாம் திரும்பியிருக்கிறீர்கள். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்யப்போனதால் உரிமைக்குரல் எழுப்பி தாய்க்கழகத்துக்கு திரும்பியுவள்ளவர்களை வரவேற்கிறேன். தடம் மாறாமல் திராவிடப் பாதைக்கு திரும்பியவர்களை வரவேற்கிறேன்.

அண்ணாவையும், அவர் பெயரிலுள்ள அதிமுவையும், அவரது கொள்கைளையும் மறந்து துரோகத்தின் முழு உருவமானதால் அண்ணா தொடங்கிய இயக்கத்துக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். சுயமரியாதை கோட்டையான அண்ணா அறிவலாயத்துக்கு வந்துள்ளீர்கள். மேடையில் ஓபிஎஸ் இருப்பதை பார்க்கும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது. 2008-ல் கருணாநதி முதல்வராக இருந்தபோது ஓபிஎஸ் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் நடந்த கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் பேசினார். மறுநாள் பத்திரிகையில் என்ன தலைப்புச் செய்திபோட்டார்கள் தெரியுமா? பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம் என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டார்கள். பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம் அதற்கெல்லாம் கவலைப்படக்கூடாது.

பெரியார் பச்சைத்தமிழர் என காமராஜருக்கு பட்டம் கொடுத்தார். அதேபோல், முரசொலியில் பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம் என முரசு அடித்து கொடுத்திருக்கிறது என கருணாநிதியால் பாராட்டப்பெற்றவர் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் எப்போதும் சிரித்த முகமாகத்தான் இருப்பார். அதுதான் அவரது பண்பு. பொதுவாக ஒருத்தரை ஒருத்தர் முறைத்தால்தான் பிரச்சினையாகிவிடும். ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு ஒரு காலத்தில் அவரது சிரிப்பே பிரச்சினையாகிவிட்டது. ஒருமுறை சட்டமன்றத்தில் அவர் என்னைப்பார்த்து சிரித்தார். அதற்கு ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரித்துவிட்டார் என ஏதோ இரண்டு நாட்டுக்குள் போர் வந்ததுபோல் சிலர் பிரச்சினையாக்கி விட்டனர்.

அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும்போது நலம் விசாரிப்பதுதான் அரசியல் மாண்பு, அதுதான் பண்பாடு. அப்படித்தான் அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை பார்த்து மரியாதைக்காக நான் வணக்கம் வைத்தேன். அவரும் சிரித்தார். இதை குற்றச்சாட்டு ஆக்கிவிட்டனர். யார் என்ன சொன்னாலும் தனது பண்பை மாற்றிக்கொள்ளாதவர் ஓபிஎஸ். அமைதியோடும், அன்போடும் அதே சிரித்த முகத்தோடு இன்றைக்கும் அவர் இருக்கிறார். அமைதி, புன்னகை மட்டுமல்ல ஓபிஎஸ் என்று சொன்னால் ஞாபகத்துக்கு வரக்கூடிய ஒரே சொல் விசுவாசம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2 முறை ஓபிஎஸ்ஸை முதல்வராக அமரவைத்தார். தன்னிடம் ஒப்படைத்த அரசாட்சியை எந்த துரோகமும் இல்லாமல் திரும்பவும் ஒப்படைத்த நேர்மைக்கு சொந்தக்காரர் ஓபிஎஸ். அதனால்தான் ஜெயலலிதாவே ஓபிஎஸ் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.

விசுவாசத்துக்கு ஓபிஎஸ் என்றால், துரோகத்துக்கு அடையாளமாக இருப்பவர் பழனிசாமி. கூவத்தூரில் சசிகலா காலில் ஊர்ந்து தவழ்ந்து போய் முதலமைச்சராகிவிட்டு, அதே அம்மையாரை நோக்கி நீ எனக்கு பதவி வாங்கித்தந்தாயா என ஒருமையில் கேட்டவர் பழனிசாமி. அவர் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று ஒபிஎஸ்ஸுக்கு நன்றாக தெரியும். பழனிசாமியை பொறுத்தவரைக்கும் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதுவேண்டுமானாலும் செய்வார்.

அதன் உச்சகட்ட துரோகம் என்ன தெரியுமா, தன்னைக் காப்பற்றிக்கொள்ள எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை இன்று அடமானம் வைத்துள்ளார் பழனிசாமி அவர் என்ன நினைக்கிறார் என்றால் பாஜக தனக்கு நல்லது செய்யும் என நினைக்கிறார். ஆனால் பாஜக உண்மையில் யாருக்கும் நல்லது செய்யாது. இன்று கூட செய்திகளை பார்த்திருப்பீர்கள்.

நாளை மகளிர் தினத்தை அடிப்படையாக வைத்து இன்று சிலிண்டர் விலையை ரூ.60 உயர்த்தி மகளிருக்கு பரிசு கொடுத்துள்ளனர். இதன் மூலம் 2024 தேர்தலின்போது சிலிண்டர் விலையை ரூ.100 என குறைத்ததை தேர்தல் பம்மாத்து என பிரதமர் மோடி நிரூபித்துள்ளார். 2024-ல் கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்க ரூ.100 குறைத்ததாக சொன்ன பிரதமர் மோடி, இன்று ஏன் விலையை ஏற்றியுள்ளார். வார்த்தைக்கு வார்த்தை பெண் சக்தி என்று சொன்னவர்களுக்கு இன்று பெண் சக்தி கண்ணுக்கு தெரியவில்லையா.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக கூறிவிட்டு வாக்குத்திருட்டு மாதிரி பெண்களின் பணத்தை பறிப்பது நியாயமா. 2024-ல் அறிவித்தது 2026-ல் எங்கே போச்சு. பாஜக மக்களுக்கு நல்லது செய்ய விடமாட்டார்கள். இதை உணர்ந்துதான் தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகையை முடக்க நினைத்த சதியை முறியடித்து மகளிர் உரிமைத்தொகை, கோடைக்கால சிறப்பு நிதியும் சேர்த்து ரூ.5 ஆயிரத்தை 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு வழங்கியுள்ளோம். திராவிட மாடல் ஆட்சயில் 2.0வில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளோம். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டி நன்மைகள் செய்து மக்களுக்கு கொடுத்தால் அதுதான் திமுக. மக்களை பற்றி கவலைப்படாமல் மக்களிடமிருந்து பணம் பறித்தால் அது பாஜக.

இப்படி யாருக்குமே எதுவுமே செய்யாத பாஜக அதிமுகவுக்கு நல்லது செய்ய போகிறது. அதிமுக ரத்தத்தைதான் உறிஞ்சி எடுக்கும். அதுதான் நடக்கப் போகிறது. இதில் பழனிசாமிக்கு டவுட் இருந்தால் இதற்காவது கொஞ்சம் தலையை தூக்கி பிஹாரில் நடப்பதை பாருங்கள். பிஹாரில் 10 முறை முதலமைச்சராக இருந்த நிதீஷ்குமாரை பாஜக பந்தாடியுள்ளது. அதனால் அவர் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை எம்பியாக போகிறார். இத்தனைக்கும் கடந்த நவம்பர் மாதம் தான் முதல்வரானார். அவர் பதவி விலகுகிறார் என்ற செய்தி அதிர்ச்சியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக பாஜக சார்பில் புதிய முதல்வர் பொறுப்பேற்க உள்ளதாக ஆதாரத் தகவல் வருகிறது. இன்று நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட கதிதான் நாளைக்கு பழனிசாமிக்கும் ஏற்படப்போகிறது.

எனக்கு கிடைத்த தகவலின்படி அதிமுக பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை ஏற்கெனவே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. இந்த தேர்தல் வரை வைத்திருக்கும். அதற்குப்பின்பு அவரையும் தூக்கிவிடுவார்கள். அதுதான் நடக்கப் போகிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்போதே மாற்றியிருப்பார்கள். அந்தளவுக்கு அதிமுக பாஜகவுக்கு கட்டுப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களின் வாக்குகளை வாங்கி தன்னை வளர்க்கும் பாஜகவின் திட்டத்துக்கு பழனிசாமி துணை போயிருக்கிறார்.

என்டிஏ சார்பில் இப்போது நடைபெறும் தேர்தல் கூட்டங்களில் பார்த்திருப்பீர்கள். அதில் நீங்கள் கவனித்தால் ஒன்று நன்றாக புரியும். அதிமுக கூட்டணி என சொல்லமாட்டார்கள், என்டிஏ கூட்டணி என்றுதான் சொன்னார்கள். ஏன் பிரதமர் மோடி, அதிமுக பெயரை சொல்லமாட்டார், 2 விரல் காட்டும் படங்களையே மாற்றிவிடுவார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு, பிஹாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைமைதான், தமிழகத்தில் பழனிசாமிக்கு நடக்கப்போகிறது. இதனை முன்கூட்டியே சரியாக கவனித்த ஓபிஎஸ், எம்ஜிஆர் வழியில் உண்மையான திரவிட இயக்கத்துக்கு திரும்பும் வகையில் அதிமுக உண்மைத் தொண்டர்கள் திமுகவுக்கு வந்துள்ளனர். இன்னும் ஏராளமானோர் வந்து கொண்டுள்ளனர். வர உள்ளனர்.

தென் மாவட்டங்களில் போதுமான வளர்ச்சி இல்லை என பொதுவாக மக்களிடம் ஒரு குறை இருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் அந்த நிலையை மாற்றியிருக்கிறோம். மதுரைக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடியில் உட்கட்டமைப்பு திட்டங்களை செய்துள்ளோம். தென்மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு செய்துள்ளோம். அடுத்த நாம் தான் இன்னும் நிறைய செய்யப்போகிறோம். கடந்த வாரம் வந்த பிரதமர் மோடியால் நம்மைப்போல் சொல்ல முடியுமா. பாஜக அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் கட்டி முடிக்கவில்லை. இதுதான் திராவிட மாடலுக்கும், பாஜக டப்பா இஞ்சின் மாடலுக்கும் உள்ள வித்தியாசம். மதுரையில் மெட்ரோ ரயிலை தடை செய்துள்ள பாஜக அரசு.

திமுக கூட்டணியில் ஏதாவது பிளவுகள் ஏற்படலாம், விரிசலை ஏற்படுத்தி குளிர் காயலாம் என ஏங்கியிருந்தனர். நமது கூட்டணி கொள்கை கூட்டணி. அதற்கு இடம் கொடுக்கவில்லை. தொடர்ந்து 4-வது பொதுத்தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளது. கொள்கை கூட்டணி மட்டுமல்ல. மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் வெற்றி கூட்டணி. தமிழகத்திலும் மதக்கலவரம், மக்களிடம் மோதல் நடக்காமல் பாதுகாத்து வளர்ச்சியை மற்றும் நோக்கமாக கொண்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பதை உணர்ந்துதான் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள பலரும் கூட்டணியை உணர்ந்து 2021 தேர்தலில் இருந்ததைவிட இன்னும் கூடுதலாக பலம் பெற்றிருக்கிறோம். சாதனைகள், கொள்கை கூட்டணி, கூட்டணி வலிமை என சென்டம் ஸ்கோர் பண்ணியிருக்கிறோம்.

‘அதனால்தான் வெல்வோம் 200’ என என்னால் சொல்ல முடிகிறது. உறுதியாக சொல்கிறேன் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகள் வென்று மீண்டும் ஆட்சியமைப்போம். இன்னும் சொல்லப்போனால் திமுக தான் மீண்டும் வெற்றி பெறப்போகிறது என பாஜக நினைக்கிறது. நமது பிரச்சார பீரங்கியாக இருந்த தமிழக ஆளுநர் ரவியை மாற்றியுள்ளனர். ஸ்டாலினுக்கு மறுபடியும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே என்ற விரக்தியில் அவர் கிளம்பிவிட்டார்.

பாஜக அரசிடம் தேர்தல் முடியும் வரை ஆளுநர் ரவியை மாற்றாதீர்கள் எனக் கேட்டேன். உள்துறை அமைச்சருக்கும் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை கூட ஏற்காமல் மாற்றிவிட்டனர். இதன் மூலம் ஆளுநர் ரவியை மாற்றி நமது வெற்றியை உறுதி செய்துள்ளனர். இப்படிப்பட்ட அரசியல் சூழலில் திமுவுக்கு வந்துள்ளீர்கள். பத்து தோல்வி பழனிசாமி கட்சியிலிருந்து வெல்லும் திமுகவுக்கு வந்துள்ளீர்கள். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். நமது கூட்டணி வெற்றிக்காக கடுமையாக உழையுங்கள். உங்கள் உழைப்புக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். ஓபிஎஸ் உடன் இணைந்துள்ளவர்களை மனதார வருக வருக என வரவறே்கிறேன். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT