சென்னை: “மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “ஐந்தாண்டு கால திமுக ஆட்சி சிறப்பாக நிறைவு பெற்றிருக்கிறது. அதனால் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதை அவர் சொல்லியிருக்கிறார்" என்று கூறினார்.
பின்னர் அவர், “அது பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் நிலை, திமுக செய்த சாதனைகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. தமிழகத்துக்கே வழி பிறந்திருக்கிறது” என்றும் ஓபிஎஸ் கூறினார்.