ஓபிஎஸ் | கோப்புப் படம்
வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழா போடி எம்எல்ஏ.அலுவலகத்தில் நடைபெற்றது. அவர்களது உருவப் படங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக-வில் இணைந்த ஜேசிடி பிரபாகர் என்னை விட்டு வெகுதூரம் சென்று பல மாதங்கள், வருடங்களாகிவிட்டது. ஆனால் இன்னமும் என்னுடன் தொடர்பில்தான் இருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்றிணைந்தால் தான், மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற சூழல் நிலவுகிறது.
பிரிந்திருப்பவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையனுக்கு முன்பாகவே,குரல் கொடுத்தது நான் தான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம். அதன் பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது தமிழக அரசியல் நிலவரம் குறித்து தான் பேசினோம். திமுக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் இணைய உள்ளதாக வெளியாகும் தகவல் தவறானது. எம்ஜிஆர் வகுத்து, ஜெயலலிதா பின்பற்றப்பட்ட அதிமுக சட்டவிதி இன்று மாற்றப்பட்டுள்ளது. அதனை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும் என்ற எங்களின் சட்டப்போராட்டம் தொடர்கிறது என்றார்.