

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சிவளர்ச்சி பணிகள், 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர் கொள்வதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜோதிமணி எம்பி-யின் குற்றச்சாட்டு அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி சதீஷ்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை வழங்கியுள்ளோம். விரைவில் இந்த பிரச்சினை சரி செய்யப்படும். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கட்டுக்கோப்பாக உள்ள கட்சி காங்கிரஸ். உட்கட்சி விவகாரங்கள் பொது வெளியில் வரக்கூடாது. இதுபோன்ற விவகாரங்கள் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு வழங்கியுள்ளனர். இது காங்கிரஸ் கட்சி துடிப்புடன் உள்ளதை காட்டுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம் எனஎந்த அரசியல் கட்சியாவது கூறுமா?நாங்கள் திமுக-வுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருந்த காரணத்தால்தான் முதலில் குழு அமைத்து முதல்வரை சந்தித்துப் பேசினோம். திமுக-வுடன் கூட்டணி இல்லை என்று நாங்கள் சொன்னோமா? திமுக கூட்டணி நம்பகமான கூட்டணி. தமிழகத்தில் யாரோ ஒருவர், யாரையோ சந்தித்தால் நாங்கள் ஏன் அதை பொருட்படுத்த வேண்டும். காங்கிரஸ் தவெக-வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம்.
வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் புகைப்படம் இருந்ததால், அக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பங்கேற்பதில்லை என முடிவெடுத்தது சரியானது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, "100 நாள் வேலைத் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடக்கும் கண்டனக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார். தமிழக காங்கிரஸ் கிராமக் கமிட்டி மாநாடும் விரைவில் நடைபெற உள்ளது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்" என்றார்.
கூட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செ.ராஜேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாநில பொருளாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.