தூத்துக்குடி அருகே கோவளம் பகுதியில் உப்பளத்தில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட உப்பள உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள்.
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உப்பளம் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் நேற்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் 'பசுமைத்தள கப்பல் கட்டும் தளம்' அமைக்கப்படவுள்ளது.
இதற்காக தூத்துக்குடி மற்றும் ஏரல் வட்டங்களுக்கு உட்பட்ட முள்ளக்காடு- 1, முள்ளக்காடு- 2 மற்றும் பழைய காயல் ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள கடலோரப் பகுதியில் 1,700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான இடங்கள் அரசு புறம்போக்கு நிலமாகும். இந்த நிலங்களை பலர் குத்தகைக்கு எடுத்து உப்பளங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால், கப்பல் கட்டும் தளம் அமைக்க உப்பள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் நேற்று காலை உப்பளங்களில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அருகே உள்ள கோவளம் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சேகர், பொருளாளர் பொன்ராஜ், சிஐடியு உப்பு தொழிலாளர் சங்க தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோவளம் கடற்கரை பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். உப்பளங்களை அழித்தும், மீனவர்களின் வாழ் வாதாரம் பாதிக்கும் வகையிலும் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.