தமிழகம்

சென்னையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.6.16 லட்சம் ரொக்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் ரூ.6,16,600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு படைகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள பொருட்கள், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.

சென்னை மாவட்டத்தில், ராயபுரம். ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம் தொகுதிகளில் தலா 4 பறக்கும் படைகள் மற்றும் மீதமுள்ள 13 தொகுதிகளில் தலா 3 பறக்கும் படைகள் வீதம், 51 பறக்கும் படைகளும், ராயபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம் தொகுதிகளில் தலா 4 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மீதமுள்ள 13 தொகுதிகளில் தலா 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என 51 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இதன்படி, நேற்று முன்தினம் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது, வில்லிவாக்கம் தொகுதியில் ரூ.95 ஆயிரம், ஆயிரம் விளக்கு தொகுதியில் ரூ.2 லட்சம், வேளச்சேரி தொகுதியில் ரூ.62,100 மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகான சோதனையின்போது, துறைமுகம் தொகுதியில் ரூ.2,59,500 என மொத்தம் ரூ.6,16,600 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமர குருபரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT